Saturday, November 03, 2007

விசாரணை

இழுத்துவைத்து பளார் என்று ஓங்கி முதுகில் ஒன்று வைக்க வேண்டும். காதைப்பிடித்து வலிக்க வலிக்க தர தர என்று இழுத்துக்கொண்டு போய் வெளியே தூக்கிப்போட வேண்டும். இன்னிக்கு மட்டும் அந்த கேள்வி வரட்டும்... எல்லாரையும் உண்டு இல்லை என்று செய்துவிட வேண்டும். பொழப்பு கெட்ட ஜன்மங்கள். புத்திகெட்டவர்கள்.

இதற்குத்தான் வெளியே வருவதில்லை. அம்மாதான் வற்புறுத்துவாள். ஒழியட்டும் என்று வந்தால், இந்த கிழங்களின் இம்சை. கல்யாணத்துக்கு வந்தோமா, பச்சப்புடி சுத்தினோமா, நாத்தனார் ஓர்ப்பொடிகளிடம் சிண்டு முடிஞ்சோமா என்று போக வேண்டியதுதானே. திடீர்ன்னு இவ்வளவு கரிசனம் எங்கேயிருந்து வருமோ தெரியலை. வரட்டும் இன்னைக்கு. மரியாதை கெட்டுடும்.

இந்த அம்மா வேற. போற இடத்திலெல்லாம் நிக்க வெச்சு வரன் தேட வேண்டியது. "இதான் பொண்ணா ?" என்ற கேள்வி காதில் விழும்போதெல்லாம் ஒரு வெறி வரும். கொலை வெறி. அப்படியே நெற்றி முடியைப்பிடித்து நங் ! நங் ! என்று சுவற்றில் இடித்து "ஆமாண்டீ ! நான் தான் பொண்ணு ! நீதான் மாமியாரா ?" என்று முகம் வெளிற விசாரிக்க வேண்டும் என்று ஒரு வெறி ஒன்று வரும். தலைதெறித்து அவர்கள் ஓடுவதை ரசிப்பதாக கற்பனை செய்துகொள்வேன். இதையெல்லாம் ஒரு நாள் செயல்படுத்திப் பார்க்க வேண்டும்.

அதோ வர்ராளே !! அய்யய்யோ ! போச்சு. இனிமே கூட்டம் கூடிடுமே.

"ஏண்டி விமலா ! நேத்து மாப்பிள்ளை அழைப்புக்கு வல்லயே !"
"இல்ல சித்தி. இவளுக்கு ஆஃபிஸிலிருந்து வர லேட் ஆயிடுத்து. அதான் !"
"என்னடியம்மா ! கல்யாண வயசுலே ஓவர் டைம் எல்லாம் எதுக்குடியம்மா ?"

ஆரம்பிச்சுட்டாள். இன்னிக்கு இவளை கொலை பண்ணாம விட மாட்டேன்.

"வர்ர வரனையெல்லாம் ஏதாவது சாக்கு போக்கு சொல்லித் தட்டிக்கழிக்கறயாமே. எப்பதான் கல்யாணம் பண்ணிக்கறதா உத்தேசம் ?"

கேட்டுவிட்டாள். இரண்டு வருடங்களாய் நான் பயந்து ஓடிகொண்டிருக்கும் கேள்வியைக் கேட்டுவிட்டாள். பேத்தலான கேள்விகளுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல வேண்டுமா ? நான் எப்போ வேண்டுமென்றாலும் கல்யாணம் செஞ்சுக்கறேன். இவளுக்கென்ன. என் டேஸ்ட், என்னோட ப்ரையாரிடீஸ் எல்லாம் முக்கியம் இல்லையா. எவனை வேணும்னாலும் கல்யாணம் செஞ்சுக்க நான் என்ன...

"இந்த மாதிரிதான் இருந்தா, அபர்ணா. என்ன ஆச்சு பாத்தியோ !!"

கப கப என்று பற்றிக்கொண்டு வந்தது. பிடறியைப்பிடித்து உலுக்குவோமா ?

"என்னவோம்மா.. இந்த ஜெனரேஷனைப் புரிஞ்சுக்கவே முடியலை.. இதோ.. இவளைப்பார் ! சேந்தாப்போல ஒரு மணி நேரம்கூட படிக்க மாட்டேங்கறா.. ! டென்த் வந்தாச்சு..."

சித்திப்பாட்டியின் பேத்தி பட்டுப்பாவாடையில் முறைத்துக்கொண்டிருந்தாள்.

நான் கேட்டேன், அவளிடம் "என்னடி.. நன்னா படிக்கறயா ?".

ஓஹோ ! கேட்டுவிட்டோமோ ?

5 comments:

Manki said...

sweet :)

Shivathmika said...

keerthi, whose incident is this? the author seems to be female "எவனை வேணும்னாலும் கல்யாணம் செஞ்சுக்க நான் என்ன..."
this shows the erichal of a girl.. and this is 100% true...

prabukarthik said...

idhu brilliant stuff keerthi!!

Keerthi said...

Manki, thanks.

Shivathmika, Nobodys. Pure fiction :)

PK, thanks a lot. :)

monu said...

brought a smile to my face...really nice...

i always come to your blog thinking, now he would have def updated his blog and it will be surely differnt and interesting....you alomst never let me down!
good
and Happy Diwali!