Saturday, September 20, 2008

பல் சுவை பதிவு

எப்போதோ கற்றதும் பெற்றதும் பகுதியில், ஒரு கவிதைப் போட்டியில் சுஜாதா குறிப்பிட்டிருந்தது, இது. (யார் எழுதியது என்று தெரியவில்லை).

துன்பங்கள் இரண்டு வகை
ஒன்று சொல்லால் வருவது
இன்னொன்று செயலால் வருவது
இரண்டாலும் என்றால், அது பல்லால் வருவது...

சில நாட்களுக்குப் பின் அவர் இதன் ஒரிஜினலையும் ஓக்டென் நேஷ் என்பவர் எழுதியதாக வெளியிட்டிருந்தார். இவரின் கொட்டேஷன்கள் மிக பிரசித்தி பெற்றவை என்று சுஜாதா எழுதியவுடன் இவரைப் பற்றி தெரிந்துகொள்ள முடிந்தது (!).

Some tortures are physical
And some are mental,
But the one that is both Is dental

கிட்டத்தட்ட ஒருவாரமாய், தாளாத பல் வலி வந்ததால், இதையெல்லாம் தேடி எடுத்துப் படித்துக்கொண்டிருந்தேன். ஆனாலும் பல்வலி குறைந்தபாடில்லை. அது சரி... "கரெண்ட் பில் கட்டினால் கரண்ட் வந்துவிடும்" என்ற நம்பிக்கை மாதிரிதான் இதுவும்.

டாக்டரிடம் சென்று காண்பித்தால், மஹாளயம் எல்லாம் பார்த்துவிட்டு, "உங்கள் சொத்தை(யை) செவ்வாய்க்கிழமை ஒரு கை பார்க்கிறேன்" என்று சொல்லி அனுப்பிவிட்டார். தற்போது யாராவது வீட்டுக்கு வந்தால் "மைனாரிட்டி திமுக அரசு" கவிழ்ந்துவிட்டதுபோலே கன்னத்தில் கைவைத்துக்கொண்டு நான் உட்கார்ந்திருப்பதை தரிசிக்கலாம்.

ஈறு கெட்ட எதிர்மரை எச்சம் வாழ்வில் கொடுமையானது.

உடம்பில் எந்தெந்தப் பகுதியில் வலி வந்தாலும், அந்தப் பகுதி வலிதான் கொடுமையானது என்ற எண்ணம் தோன்றுவது இயற்கை. நடு முதுகில் அரிக்கும் போது, ப்ராணாவஸ்தையாக இருக்கும். அதை விட வேறெதுவும் கொடுமையாக இருக்க முடியாது என்று தோன்றும். கர்சீப் கொண்டு செல்ல மறந்துபோன கான்ஃபெரென்ஸ் மீட்டிங்கில் ஜலதோஷம் போல் கொடுமை வேறெதுவும் இல்லை என்று உணரப்படும். இப்படி ஒற்றைத் தலைவலி வந்தால், வண்டி ஓட்டும்போது சுளுக்கு ஏற்பட்டால், நகச்சுத்தி வந்தால் என்று அவ்வப்போது, அந்தந்த வலிகள் கொடுமையானவை.

பல்வலி ஏற்படும்போது பல்வலி தான் கொடுமையான வலி. (ஹென்ஸ் தி ப்ரூஃப்)

இலவச உபாயங்கள் என்றால் தெரியுமா ?

நண்பர்கள் மற்றும் உறவினர்கள், உங்களுக்கு நேர்ந்திருக்கும் வலியை பார்த்தோ, கேள்விப்பட்டோ பரிதவித்தோ, அல்லது பரிதவிக்காமலோ இலவசமாக சொல்லும் உபாயங்கள். மங்கையர் மலரிலோ, அல்லது ஃபார்வர்ட் மெயிலிலோ அவர்கள் படித்த உபாயங்களை நமக்கு அள்ளித் தெளிப்பர். "எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்" என்று டெஸ்பரேட்டாக இருக்கும் நமக்கு, அத்தையும்தான் செய்து பார்ப்போமே என்ற எண்ணம் வருவதை தவிர்க்க இயலாது.

தொண்டை கரகரப்புக்கு "மிளகு நெய்யில் வறுத்து, அந்த நெய்யைப் பருகுதல்", "உப்புக் கொப்பளித்தல்" என்று ஆரம்பித்து கற்பூரவல்லி வரை அத்தனை அவெய்லபிள் ஐட்டங்களையும் உபயோகிக்கும் மருத்துவ முறைகளை ஒவ்வொருவரும் சொல்லுவார்கள். இப்படி ஒவ்வொரு வலிக்கும் ஒரு ஈஸி நிவாரணம், அல்லது தற்காலிக நிவாரணம்.

பல் வலிக்கு ? பல் டாக்டரிடம் செல்வதை விட வேறு வழியே இல்லை. ஆனால் அந்த ராத்திரியைக் கடந்து அடுத்த நாள் செல்லலாம் என்றால் பற்கள் விட்டால்தானே.. (உன்னை நம்பும் உறுப்புகள் கூட ஒருபொழுதுன்னைக் கைவிடுமே).

இதற்கு என் அம்மா சொன்ன ஒரு ஐடியா... டைகர் பாமை விறு விறுவென்று தாடையில் தடவிக்கொண்டு, ஒரு உல்லன் ஸ்கார்ஃபை அதன்மேல் அழுத்தி அந்தப்பக்கமாக படுத்துக்கொண்டால், வலியை மறந்து தூங்கலாம். நிஜம்மாகவே கடந்த சில நாட்களாக எனக்கு நிம்மதியான தூக்கம் கிடைப்பது அம்மாவின் இந்த ஐடியாவினால்தான்.

நீங்களும் ட்ரை செய்து பாருங்களேன். (மங்கையர் மலரில் இப்படித்தான் முடிப்பார்கள்)
தேவையான பொருட்கள்.
ஐம்பது சாக்லேட்டுகள்
அல்வா, ஜாங்கிரி, மைசூர்பாக்கு இன்ன பிற..
டைகர் பாம்
உல்லன் ஸ்கார்ஃப்
முக்கிய குறிப்பு - பல் துலக்குவது கூடாது..

:)

4 comments:

Shobana said...

Put a clove on that tooth that is hurting and bite down on it. Or even if u can get clove oil, you can take a little on a piece of cotton and put it on.

Is Ogden Nash the same person as who's life story was said in the movie, Beautiful Mind, played by Russell Crowe?

Keerthi said...

Hey, Thanks Shobana. Been trying that too (as well as some Naarthangai)..

BTW, its a different Nash in a Beautiful Mind - http://en.wikipedia.org/wiki/John_Forbes_Nash

Shobana said...

Thanks!

Poetry said...
This comment has been removed by the author.