Saturday, September 27, 2008

பணிப்பெண் ஆக விருப்பமா ?சின்ன வயதில், பைலட் ஆக வேண்டுமென்ற ஆசை பல பேருக்கு எப்படி ஏற்படுகிறது ? (By the way, இன்னும் ஏற்படுகிறதா ?) அதற்காக Enterprise Architect ஆக வேண்டும் என்ற ஆசை ஆறு வயதில் வந்தால், அடிப்படையாக ஏதோ ஒரு தவறு நிகழ்ந்திருக்கின்றது என்று அர்த்தம்.

விஷயம் என்னவென்றால், இளம்பிராயத்தின் பசுமையான நினைவுகளில், இந்த Ambition என்ற வார்த்தை கொஞ்சம் தனித்துத் தெரியும். காரணம், க்ளாஸுக்கு க்ளாஸ் மாறும்போது, புது டீச்சர் கேட்கும் கேள்வி இதைப்பற்றித்தான் இருக்கும். க்ளாஸுக்கு க்ளாஸ் பதில் மாறுமோ என்னமோ, ஆனால் இந்த "பைலட்" என்ற ப்ரொஃபஷன் காதில் ஒலித்த ஞாபகம் இருக்கிறது.

என் அக்காவின் ஃப்ரெண்டுடைய உறவினர் ஒருவர் பைலட்டாக இருப்பதாகவும், நாடு நாடாகச் சென்று உல்லாசமாக இருப்பதாகவும், நானும் நன்றாகப் படித்தால் பைலட் ஆகலாம் என்று உபதேசிக்கப்பட்டேன். அதெல்லாம் ஆம்பிஷன்களாக இல்லாமல், கொஞ்ச நேரத்தில் கரைந்துபோகும் எண்ணங்களாகவும், சில சமயங்களில் கனவுகளாகவுமே சென்றன.

என்னுடைய சமகாலத்து நண்பிகள் "ஏர் ஹோஸ்டஸ்" மோகம் கொண்டனர். சாஃப்ட்வேர் இன்ஜினியர்கள் யாரும் ப்ரபல்யமாகாத காலத்தில், சிறு வயதினர் மனதில் வைத்து கற்பனை செய்ய இருந்த சில தொழில்களில் சில - "பைலட்","டாக்டர்","சைன்டிஸ்ட்","ஏர் ஹோஸ்டஸ்", பொதுவாக "இன்ஜினியர்".. (இப்பொழுதெல்லாம் பெரும்பாலும் அமெரிக்காவில் "எம்.எஸ்" அல்லது ஏதாவது ஐ.ஐ.எம்மில் "எம்.பி.ஏ" போன்றவைதான் ஆம்பிஷன்கள். நாசா, மைக்ரோசாஃப்ட், கூகிள், E&Y போன்ற நிறுவனங்கள் சில பேருக்கு ஆம்பிஷன். )

சரி ரொம்ப டீவியேட் ஆகாமல் விஷயத்துக்கு வருகிறேன்.

கடந்த சில வருடங்களில் பல தடவை ஏரோப்ளேனில் சென்ற போது (உள் நாட்டில் மட்டுமே) ஏற்பட்ட அனுபவத்திலும், பொதுவான ஒரு கண்ணோட்டத்திலும் பார்த்தால், இந்த "ஏர் ஹோஸ்டஸ்" என்ற உத்யோகம் ஒன்றும், மேலே காணும் விளம்பரத்தில் கூறுவது போல தனிச்சிறப்பு வாய்ந்தது அல்ல என்று எனக்குத் தோன்றுகிறது. சிறு வயதில் அந்த வேலைக்கு நம் எண்ணங்களில் இருந்த மரியாதை, இன்றைய நிஜத்தில் இல்லை. அட்லீஸ்ட் எனக்கு.

அதற்காக அந்த வேலையை நான் பழிக்கவில்லை. அந்த வேலைக்குச் செல்வதில் தவறொன்றும் இல்லை. ஆனால், அது ஒன்றும் அன்று ரேடியோவில் கேட்டதுபோல, "என் மகள் ஏர் ஹோஸ்டஸாக வர வேண்டும்" என்று விரும்பத்தகும் அளவுக்கு அந்த வேலைக்கு இப்பொழுது சார்ம் இல்லை. எப்பொழுதுமே இருந்திருக்காதோ என்னவோ... ஆனால், நான் முன்பெல்லாம் அப்படித்தான் நினைத்திருந்தேன்.

அந்தக் காலம் மாதிரி இன்னும் அதிக சம்பளம் கிடைக்கிறதா என்றும் பார்க்கவேண்டும். கூகிளில் பீராய்ந்ததில், 16,000ல் ஆரம்பித்து 1,20,000 வரை மாதச்சம்பளம் வரக்கூடும் என்ற தகவல் தெரிந்தது. (இதை யாரிடம் ஊர்ஜிதப்படுத்திக்கொள்வது ?).. ரிட்டையர்மெண்ட் எப்பொழுது ? பணி செய்யும் வருடங்கள் எவ்வளவு ? மேலும் இப்பொழுதிருக்கும் "Air Hostess Training Academy"ல் படித்துவிட்டு ஹோட்டல்களில் ஃப்ரொன்ட் டெஸ்கில் வேலை கிடைப்பதாகவும் தகவல்.

1989 வாக்கில் மாமாவை வழியனுப்ப ஏர் போர்ட் சென்றிருந்தபோது, பளீர் புடவைகளில் தகதக என்று ஏர் இண்டியா ஏர் ஹோஸ்டஸ்களைப் பார்த்ததற்கும், இப்பொழுது கிங்ஃபிஷர் விமானத்தில் சீட்டுக்குப்ப்பின்னால் இருக்கும் திரையில் யானா குப்தா வந்து இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் கொடுப்பதற்கும் உள்ள வித்தியாசம்...

ஹ்ம்ம்ம்..

தமிழில் மொழிபெயர்த்தால் - விமானப் பணிப்பெண் என்று வருகிறது. அர்த்தம் சரிதான் என்றாலும், சரியான மொழிபெயர்ப்பல்ல. Host - என்றால் உபசரிப்பவர் என்று அர்த்தம்.

எனிவே !! பணிப்பெண் வேலைக்கு செல்வதில், விளம்பரத்தில் சொல்வது போல என்ன uniqueness இருக்கிறது ?

Everyone is unique... just like everyone else !!

No comments: