Tuesday, October 07, 2008

சீதோஷ்ன நிலையைப் பற்றி பேசுவதில் தான் முக்கால்வாசி உரையாடல்கள் ஆரம்பிக்கின்றன, என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அடுத்தவரைப் பற்றி ஒன்றுமே தெரிந்துகொள்ளாமல், பொத்தாம் பொதுவாக - ஒரு opinion taint இல்லாத ஒரு விஷயத்தைப் பற்றிப் பேச முடியும் என்றால் அது வானிலைதான்.

உதாரணமாக ட்ரெயினுக்காக காத்திருக்கும்போது, பக்கத்தில் இருப்பவரிடம் ஒரு உரையாடல் ஆரம்பிக்கவேண்டுமென்றால், ஜெயலலிதா கருணாநிதி விஜயகாந்த் என்று குறிப்பிட்டு அரசியல் பேச முடியாது. "எங்க தலைவனையாடா லூஸுன்னு சொன்னே !!" என்று சண்டைக்கு வந்தால் நிலைமை மோசமாகிவிடும். அஜித், விஜய் என்றும் பேச முடியாது. சாமி, ஜாதி, ரிசர்வேஷன் பற்றியும் பேச முடியாது. விபரீதத்தின் எல்லை.

அடுத்தவர் வைத்திருக்கும் கருத்தை ஊகித்துக்கொண்டு பேச முடியாது - அதாவது முன்பின் தெரியாதவரிடம். அது சரி ! முன்பின் தெரியாதவரிடம் ஏன் பேச வேண்டும் ?

அதற்கு என் பதில் - அல்லது பதில் கேள்வி - "ஏன் கூடாது ?"

பேசிப் பாருங்கள். நம் எல்லைக்குள் இல்லாத, நம் சிந்தனை சாயல் இல்லாத, நம் மனதில் கூட நிற்காத முகங்களிடம் பேசிப்பாருங்கள். ஒன்று - பொழுது போகும். இரண்டு - வெவ்வேறு பரிணாமங்களில் யோசனைகள், கருத்துக்கள், சலிப்புகள், சந்தோஷங்கள் தெரியும். Third person perspective கிடைக்கும்.

எப்படிப் பேச ஆரம்பிப்பது ?

அது தான் சொன்னேனே.. சீதோஷ்ணம்..

"இன்னிக்கு வெயில் ரொம்ப ஜாஸ்தி" என்று சொல்லுங்கள்.. அவர் ஆமோதித்தே ஆக வேண்டும். ஒன்றும் ரியாக்ஷன் இல்லையா... விடாதீர்கள்.. முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்.

"இல்ல சார் ?" என்று பதில் எதிர்பார்ப்பதை வெளிப்படையாக உணர்த்தவும்.

"இங்கே பரவாயில்லே.. எங்க ஊர்ல இதவிட ஜாஸ்தியா இருக்கும்.. "

"மதுரையா... !!"

"இல்ல வேலூர்.. 42 எல்லாம் சாதாரணமா வரும்.. "

"ஓஹோ.. கேள்விப் பட்டிருக்கேன். ஆனா போனதில்ல.. இங்கே மெட்ராஸிலே மே மாசம் எல்லாம் வறுத்து எடுக்கும்"..

"வேலூர்ல வெந்துடும். மெட்ராஸெல்லாம் தேவலை.. எங்க பாக்டரிக்குள்ளே ஓவன் மாதிரி இருக்கும்"

"ஹ்ம்ம்.. என்ன ஃபாக்டரி ?"

இப்படியாக, உரையாடல் வளர்க்கலாம். அவரையே பேச விடாமல், நீங்களும் வெளியிடத்தகுந்த கருத்துக்களை மட்டும் வெளியிட்டுப் பேசலாம். ரொம்ப புலம்ப ஆரம்பிக்கும் ஆசாமிகளிடம் ஜாக்கிரதை. கருத்து ஒவ்வாமை லேசாக எட்டிப்பார்த்தால் கூட, விவாதத்தை அல்லது உரையாடலை வேறு திசைக்கு மாற்றிவிட வேண்டும்.

சில வருடங்களாக முடிந்த இடங்களில் Stranger (தமிழில் இதற்கு அழகான வார்த்தை இல்லையோ ?) களிடம் பேசுவதை வழக்கமாக கொண்டிருக்கிறேன் - அதாவது நான் தனியாக இருக்கும் போது. நம்மை நாமே அப்ரோச்சபிளாக மாற்றிக்கொள்ள ஒரு வழியாக இது எனக்குத் தோன்றியதால் வந்த முயற்சி இது.

1 comment:

venkatramanan said...

அந்நியன்!