Heavily inspired by "Everybody Loves Raymond"
"ஐ ஹேட் யூ !!" என்ற குரல் கேட்கிறது, இடதுபுறத்திலிருந்து.
வெளிச்சம். ஒரு மத்திய தர ஃப்ளாட்டின் ஒரு ஹால் தெரிகிறது. நடுவில் மூன்று பேர் அமரக்கூடிய ஒரு சோபா. அதன் மீது இன்றைய நியூஸ் பேப்பர்.. அதன் மீது டி.வி. ரிமோட் தலைகுப்புற வைக்கப்பட்டிருக்கிறது. அதன் முன்னே ஒரு டீபா.. மேலே களேபரமாக புஸ்தகங்களும், நேற்றிரவு கழட்டிப்போட்ட துணிமணிகளும் ஒரு டெலிபோனும் தெரிகின்றன. ஆஃப் வொயிட் நிறத்தில் தெரியும் சுவர்களில் ஒரு பெரிய சுவர்க் கடிகாரம் ஒன்பதே கால் என மணி காட்டுகிறது. வலது புறத்தில் வாசற்கதவு தென்படுகிறது. இடதுபுறத்தில் சமயற்கட்டின் வாசல் தெரிகிறது.
"ஐ ஜஸ்ட் ஹேட் யூ,... !" என்று மறுபடியும் குரல் கேட்கின்றது. இடப்புற வாயில் வழியாக காதை மூடிக்கொண்டே ஸ்ரீ என்கிற ஸ்ரீகுமார் வெளிவருகிறான். காலர் இல்லாத சாம்பல் நிற டீ ஷர்டும் கறுப்பு நிற ஷார்ட்ஸும் அணிந்திருக்கிறான். ஹாலுக்கு வந்து கசங்கிய நியுஸ் பேப்பரை எடுத்து அவசரமாக படிக்கப் பிரிக்கிறான். ரிமோட்டை எடுத்து நம்மை நோக்கி அழுத்துகிறான். டி.வியில் கிரிக்கெட் இரைச்சல் கேட்கின்றது.
இடது சமயல் வாயில் வழியாக வஸந்தி சிகப்பு நிற சுடிதார், துப்பட்டா இன்றி வேகமாக வெளிவருகிறாள். எரிச்சலாக நம்மை நோக்கிப் பார்க்கிறாள். பின் பேப்பர் படித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீயைப் பார்க்கிறாள். கோபமாக கைகளை இடுப்பில் வைத்துக்கொள்கிறாள். சோபாவிலிருந்து ரிமோட்டை விருட்டென எடுத்து நம்மை நோக்கிக் காட்டுகிறாள். இரைச்சல் சப்தம் நிற்கிறது. ஸ்ரீ கவனிக்காமல் பேப்பரை புரட்டுகிறான். ரிமோட்டை சோபாவில் எறிந்துவிட்டு, ஸ்ரீயின் கையில் இருந்த பேப்பரைப் பிடுங்கி நடுவாகில் சுக்குநூறாகக் கிழிக்கிறாள்.
ஸ்ரீ என்கிற ஸ்ரீகுமார் இமைகொட்டாமல் அவளையே பயத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறான். எரிக்கும் பார்வையில் பாவனையாக மூச்சை இழுத்து வாங்கிக்கொண்டிருந்தாள் வஸந்தி.
கைகள் இரண்டையும் வானத்தை நோக்கி விரித்து "ஆதி மூலமே..." என்று கத்துகிறான் ஸ்ரீ.
"கரெக்ட்.. உன்னை இனிமே அந்த கடவுள்தான் காப்பாத்தனும். " என்று சொல்லி சோபாவில் இருந்த ஒரு குஷனை எடுத்து அவன் மீது எறிந்தாள், வஸந்தி.. தடுத்தபடி சாய்கிறான், ஸ்ரீ என்கிற ஸ்ரீகுமார்.
கட்...நிற்க.
பல மெகாசீரியல்கள் பார்த்துப் பழகிய உங்களுக்கு, கொஞ்சம் சிக்கனமாக முன்கதைச் சுருக்கம் சொல்ல விழைகிறேன். ஸ்ரீகுமார் பற்றியும் வஸந்தி பற்றியும் ஆயாசமாக கதையின் போக்கில் தெரிந்துகொள்ளலாம். ஆனால், முக்கியமாக நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியது அவர்கள் இருக்கும் இந்த வீட்டைப் பற்றி. அதற்காக கொஞ்சம் கதையின் போக்கிலிருந்து வெளியேவந்து எந்தக் கதையின் ஆரம்பத்திலும் தோன்றும் இயல்பான அறியாமையை அகற்றிவிட்டு ஸ்ரீகுமார்-வஸந்தியின் சண்டை முடியும் முன் சேர்ந்துகொள்வோம்.
ஸ்ரீ என்கிற ஸ்ரீகுமார் வஸந்தியை லோல்பட்டு காதலித்துக் கல்யாணம் செய்துகொண்டான். இருவர் வீடும் எதிரெதிர் துருவங்கள். அதாவது ஒரே தெருவில் எதிரெதிர் வீடு. வடக்கு பார்த்து நின்ற வீடு ஸ்ரீயின் அப்பா வேதமூர்த்தியினுடையது. தெற்கு பார்த்து நின்ற வீடு வஸந்தியின் அப்பா தாமஸ் ஆல்வரன்ஸினுடையது. தந்தைகள் இருவரும் நெடு நாள் நண்பர்களாக இருந்தார்கள் (இறந்தகாலம்).
ஸ்ரீயின் வீட்டில் பாதி மனதாக ஒத்துக்கொண்டார்கள். வஸந்தியின் வீட்டில் முழுமனதாக ஒத்துக்கொண்டு திருமணத்திற்குப் பின் பாதி மனதாக மாறிவிட்டார்கள். இரண்டிற்கும் காரணம் அம்மாக்கள். மிசஸ் கோமதி வேதமூர்த்தியும் மிசஸ் டெய்சி தாமஸும் சில சமயம் இழைவார்கள்.. சில சமயம் குழைவார்கள்.. பாக்கி சமயங்களில் கிழி கிழி என்று கிழித்துவிடுவார்கள். யதார்த்தமான பல மிடில் கிளாஸ் அண்டை அயலார் நட்பு மாதிரிதான் இவர்களுடையதும்.
கல்யாணம் இந்து முறைப்படி நடந்தது. வஸந்தி எதிர்வீட்டுக்கு புகுந்தாள். வஸந்தியை மருமகள் என்ற முறையில் எதிர்பார்க்காததாலும், தன் உத்தம புத்திரனாகிய ஸ்ரீயை மயக்கிய மினுக்கி என்று நம்புவதாலும், இன்னும் முக்கியமாக அந்த டெய்சியின் மகளாக இருந்ததாலும் வஸந்தியை மனதிற்குள் கருவினாள். வஸந்தி இந்த விஷயத்தை வேறு விதமாக அனுகினாள். இன்கம் டேக்ஸைக் காரணம் காட்டி புதிதாக வீடு வாங்கி தனிக்குடித்தனம் போகலாம் என்ற யோசனையை அப்பாவி ஸ்ரீயின் ஞானத்தில் உதயமாகச் செய்தாள்.
ஸ்ரீயும் வஸந்தியும் தனிக்குடித்தனம் போனால்தான் நல்லது என்று ஒன்றுகூடி முடிவு செய்தார்கள். ஆனால், அதில் ஸ்ரீக்கும் வஸந்திக்கும் ஏக வருத்தம்.
காரணம், தனிக்குடித்தனம் போக இருவர் வீட்டிலும் முடிவு செய்த இடம் அதே தெருவில் வடமேற்காக வாசல் பார்த்திருக்கும் ஒரு ஃப்ளாட்டின் முதல் மாடியின் ஒரு வீட்டை. வேறு பெரிய வழி இல்லாததால், முப்பது இலட்ச ரூபாய்க் கடன் பத்திரத்தோடு க்ரஹப்ரவேசம் செய்தான் ஸ்ரீ என்கிற ஸ்ரீகுமார். வீட்டின் பெயர் "சமந்த பஞ்சகம்" என்று வைத்தார் வேதமூர்த்தி. யாருக்கும் புரியவில்லை.
இத்தனை கதாபாத்திரங்களில் அனைவருக்கும் உள்ள ஒற்றுமை, ஸ்ரீ என்கிற ஸ்ரீகுமாரை அனைவரும் சம அளவில் நேசித்தார்கள்.
இந்த முன்னுரை போதும் என்பதாலும், ஒரு நாளில் தோன்றி மறையும் இருபது சண்டைகளில் ஒன்றான மேற்கண்ட சண்டை முடியப்போவதாலும் இந்த உரையை இத்துடன் முடித்துக்கொண்டு மறுபடியும் ஹாலுக்குச் செல்வோம்.
வெளிச்சம்.
contd - next week.
1 comment:
excellent narration.let me know if you have any theater ambitions.
-karthik
Post a Comment