Sunday, June 07, 2009

வேணு கிருஷ்ணனின் மன அமைதி

அன்றைக்கு வேணு கிருஷ்ணன் சீக்கிரமாக வீடு திரும்பியிருந்தான். வீடு பூட்டியிருந்தது. வழக்கமான நேரத்தைவிட ஒரு மணி நேரம் சீக்கிரமாக திரும்பியிருந்தான். சாவித்ரி இன்று தன் தூரத்து பெரியம்மா ஒருவரின் மகனின் திருமண வரவேற்பிற்குச் சென்றிருக்கிறாள். சாவித்ரியும் வேணுவும் ஈஸ்வரன் சாட்சியாக அக்கினியை வலம் வந்து மூன்று வருடங்கள் ஆகின்றன.

பக்கத்துவீட்டு காலிங் பெல்லை அழுத்தினான், வேணு. அவன் அடிக்கடி வந்திராத வீடு.. அடிக்கடி பார்த்திராத மாமி. அவரை மாமி என்று அழைப்பதா என்னங்க வாங்க போங்க என்ற பொதுப்படையில் அழைப்பதா என்று அவர் கதவைத் திறக்கும் வரையில் யோசித்தான்.

கதவு திறந்ததும், ஒரு புன்னகை உதிர்த்துவிட்டு "சாவி கொடுத்துட்டு போயிருக்காளா ?" என்று கேட்டான். "தோ, எடுத்துட்டு வரேன். உள்ளே வாங்க.. காபி சாப்பிடறீங்களா ?" என்றபடியே உள்ளே சென்றார்.

"இல்லை.. நோ தேங்க்ஸ்.." என்று சாவியை வாங்கிவிட்டு தன் வீட்டுக்குச் சென்றான். சென்னைக்காரர்கள், பல பேர் நினைப்பதுபோல் இல்லை. நல்ல மனிதர்கள் எல்லா இடங்களிலும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டான்.

கதவைத் திறந்தான். ஸூன்யம் ஆட்கொண்ட வீடு போல இருந்தது. ஆபீஸ் கடுப்பில் ஏற்கனவே உழன்றுகொண்டிருந்த வேணுவின் மன அமைதி ஒரேடியாக ஓடிவிட்டது. சாக்ஸை கழற்றி தூக்கி எறிந்தான். அவன் கோபத்தின் வீரியத்தின் வெளிப்பாடாக இருந்தாலும், எடை குறைவான சாக்ஸ் பக்கத்திலேயே விழுந்தது. மங்கலான வெளிச்சத்திலேயே அசிங்கமாகத் தெரிந்த ஹால், விளக்கைப் போட்டவுடன் கலவரம் நிகழ்ந்த கிராமத்து மைதானம் மாதிரி காட்சியளித்தது.

கச கச என்று இருந்ததால், காற்றாடியை சுழலவிட்டான். சோபாவின் மேல் இருந்த நியூஸ் பேப்பர் பறக்க ஆரம்பித்தது. அதை பிடிக்கப் போனபோது அந்த ஜீவாத்மாவினிலிருந்து பிரிந்த ஒரு இலவச இணைப்பு சோபாவின் அடியில் புகுந்து கொண்டது. ஆத்திரத்தில் கையில் இருந்த பேப்பரை கசக்கிக் கிழித்தான். குணிந்து சோபாவின் அடியில் இருந்த அந்த இலவச இணைப்பை, கை எட்டும் தூரத்தைவிட நான்கு இன்ச் தூரத்தில் இருந்த அதை, எட்டிப் பிடித்து இருந்த கடுப்பில் அதையும் கசக்கினான்.

மேலே எழுந்து பார்த்ததில், பெருக்காத தரையில் இருந்த, சென்னைக்கு பெருமை சேர்க்கும் மாசற்ற தூசி தன் ராசியான சட்டையில் ஐக்கியம் ஆனதைக் கண்டான். பொறுமையின் எல்லையில் இருந்தான் அவன்.

டேபிளில் ஈ மொய்த்துக்கொண்டிருந்த காபி டம்ப்ளர். காய்ந்து போன இட்டிலி தட்டில், தான் விரல்களால் சட்டினியை வழித்ததின் சுவடுகள் தெரிய காய்ந்துபோயிருந்தது. மயிர்க்கொத்துடன் சீப்பு. ஈரமாக உலர்த்தப்படாத நாற்றமான டர்க்கி டவல்.

சே !! வீடா இது.

பணம் சம்பாதித்து என்ன ப்ரயோஜனம். மன அமைதி எங்கே கிடைக்கிறது. பல்லை நற நற என்று கடித்தான். சட்டையின் அழுக்கு அவனை அதிகம் பாதித்திருந்தது. நுணிக்காலில் துளி அழுக்கு பட்டாலும் அவனுக்குப் பொறுக்காது. "சாவித்ரி.. தரை பார்.. ரொம்ப டர்ட்டியா இருக்கு.. தரையைப் பெருக்கலாம்ல.. இதுக்கு வேணும்னா ஒரு வேலைக்காரியை வெச்சுக்க வேண்டியதுதானே".. என்பான்.

ரெஸ்ட்லெஸாக இருந்தான். பின் ஒரு முடிவுக்கு வந்தவனாய், அத்தனையையும் ஒழிக்க ஆரம்பித்தான். கிழிந்த நியூஸ்பேப்பரை குப்பைத் தொட்டியில் போட்டான். காப்பி டம்ளர் டவரா, இட்லி சாப்பிட்ட தட்டு எல்லாவற்றையும் சமையல் சிங்கில் போட்டான். அங்கே இன்னொரு யுத்தகளம் காத்திருந்தது. எண்ணைப் பிசுக்குடன் பாத்திரங்கள். அப்படியே அத்தனையையும் சிங்க்கில் போட்டுவிட்டு அவற்றிற்கு ஜலக்கிரீடை செய்தான்.

ஹாலுக்கு வந்து பார்த்த்போது, இப்பொழுது கொஞ்சம் ஒழுங்காகத் தெரிந்தது. ஆனால் காலில் தூசி ஒட்டியது. விளக்குமாறை ஒரு ஐந்து நிமிடங்கள் தேடி, ஃப்ரிட்ஜுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டிருந்த அதை எடுத்துவந்து குணிந்து ஹால் தரையைப் பெருக்கினான். பெருக்கப் பெருக்க அழுக்கு குமிந்ததைப் பார்க்க சந்தோஷமாக இருந்தது. பெருக்கும்போது குப்பை வந்தால்தான், பெருக்கியதின் பலன்.

பனியனில் வியர்வை தோலில் ஒட்டியது. பாத்ரூமுக்குப் போய் ஷவரில் குளித்தான். வெளியே வந்தவுடன் ஸ்வாமி படத்தின்முன் நின்று கும்பிட்டான். இதெல்லாமே அவனது வழக்கமான செய்கைகளை மீறியவை. ஆகவே, புதிதாக உணர்ந்தான். விபூதி இட்டுக்கொண்டு ஹாலுக்கு வந்தான். பளீர் என்று இருந்தது. அவனுக்கே பெருமையாக இருந்தது. சோபாவில் உட்கார்ந்து கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக்கொண்டான்.

யோசித்துப் பார்த்தான். அவன் ஆபிஸிலிருந்து தினமும் திரும்பும் போது வீடு இப்படித்தான் அழகாக இருக்கும். அவன் உள்ளே நுழைந்தபோது பார்த்த அத்தனை களேபரங்களும் தினமும் காலையில் அவன் நிகழ்த்துபவை. பாவம் சாவித்ரி. அவள் அத்தனையும் வாரிப் பெருக்கி, அலம்பி, துவைத்து என எல்லாவற்றையும் செய்து வைப்பாள். இந்த வீட்டை ரத்தினமாய் ஜொலிக்கவைப்பவள் அவள்தான். அவள் இல்லாத ஒரு நாளே எப்படி இருக்கிறது.. அவளை நினைக்கும் போது பெருமையாக இருந்தது.

இன்று அவள் பெருமைப்படுவாள். அவள் வீடு திரும்பும்போது அவள் முகத்தில் சந்தோஷத்தைப் பார்க்கவேண்டும். காலரைத் தூக்கிவிட்டுக்கொள்ள வேண்டும். அத்தனை நேரம் வேலைபார்த்துவிட்டு வந்த பிறகும், வீட்டு வேலைகளைச் செய்ய முடியும் என்று காண்பிக்கவேண்டும்.

இப்படி யோசித்துக்கொண்டிருக்கும்போதே பசித்தது. அவள் இருந்திருந்தால், ஆபீஸிலிருந்து வந்தவுடன் ஜில்லென்று ஏதாவது கொடுத்திருப்பாள். நேற்று ஏதோ ஸ்குவாஷ் கொடுத்தாளே.. ஃப்ரிட்ஜுக்குள் இருக்குமோ ? எழுந்திருந்து சமையலறைக்குள் சென்றான். ஃப்ரிட்ஜில் அப்படி எதுவும் இல்லை. கையில் கிடைத்த ஆப்பிளையும் ஒரு மாம்பழத்தையும், தேடிப்பிடித்து ஒரு கத்தியையும் எடுத்து வந்தான்.

டி.வியைப் போட்டான். ஆப்பிளைக் கடித்தான். நடுவில் கொட்டைகளுடன் இருந்த பகுதியை ஜன்னலுக்கு வெளியில் எறிந்தான். அது ஜன்னல் கம்பியில் பட்டு சோபாவின் அடியிலேயே விழுந்ததை, டென்னிஸ் மாட்ச் பார்த்துக்கொண்டிருந்த வேணு கவனிக்கவில்லை. கொஞ்ச நேரம் கழித்து கத்தியால் மாம்பழத்தை ஒரு கதுப்பாக நறுக்கினான். பின், அடிப்பாகத்தையும் கதுப்பாக நறுக்கி, டீப்பாயின் அடியில் இருந்த ஒரு அழுக்கான பேப்பரில் கொட்டையை வைத்தான்.

டென்னிஸில் நாடால் தோற்றுப்போன வெறுப்பில், டி.வியை அணைத்தான். ரொம்ப நாளாக படிக்கவேண்டும் என்று நினைத்திருந்த 'சில நேரங்களில் சில மனிதர்கள்' புத்தகத்தை பரண் மேலிருந்து எடுத்துப் படிக்கலாம் என்று நினைத்தான். ஒரு ஸ்டூலைப் போட்டு பரண் மேலே ஏறினான்.

----------------

இரவு பதினொன்றரை ஆகியிருந்தது. சாவித்ரி ஆட்டோவைக் கட் பண்ணிவிட்டு கேட்டைத் திறந்தாள். பலவருடங்களாக சந்த்திக்காத சித்தி பெண்களோடு அளவளாவிவிட்டு சந்தோஷமாக வீடு திரும்பி இருந்தாள்.

காலிங் பெல்லை ஒருமுறை அடித்தாள். சில வினாடிகள் பொறுத்தாள். அவர் வந்திருக்கிறார். பைக் இருக்கிறது. ஆனால் தூங்கியிருக்கக் கூடும். சாப்பிட்டாரோ என்னவோ !

தன் கைப்பையில் இருந்த இன்னுமொரு சாவியால் கதவைத் திறந்தாள்.

விளக்கைப் போட்டாள். ஹால் முழுதும் அலங்கோலமாக இருந்தது. ஆப்பிள் கொட்டைகள்.. பாதி கடித்திருந்து பல் பதிந்த ஆப்பிள்.. மாம்பழ ரசம் வழிந்து அழுக்கான டீப்பாய்.. தரையில் விழுந்து அழுக்கு பரப்பியபடி மாங்கொட்டை.... அழுக்கான சுமீத் மிக்ஸியின் அட்டை டப்பா.. அதன் உள்ளே பழுப்பாகிப் போன பழைய புத்தகங்கள்.. சில புத்தகங்கள் சோபாவில் பரப்பிவைக்கப்பட்டு காற்றாடியின் வேகத்துக்கு படபடத்துக்கொண்டிருந்தன... தரையில் பரண் மேல் ஏறிய தூசி.. வேணு மாலை குளித்துவிட்டு துவட்டிப் போட்ட நாற்றமான டர்க்கி டவல். உள்ளே லுங்கியோடு வேணு கிருஷ்ணன் தூங்கிக்கொண்டிருந்தான்.

இந்த ஹாலின் தோற்றம் அவளுக்கு பழக்கமான காட்சிதான்...

கைப்பையை கீழே வைத்துவிட்டு, ஒரு பெரு மூச்சு விட்டாள் "ப்ச்".. என்று சலித்தபடியே.

No comments: