Saturday, July 11, 2009

கதை

"நான் சொன்னத நல்லா யோசிச்சுப் பாருங்க.. உங்களை சந்திச்சதுல ரொம்ப மகிழ்ச்சி.. " என்று, புகையிலை வாசனை கமழ, அந்த பதிப்பக ஆசிரியர் கூறினார். அவர் பேச ஆரம்பித்த பத்து நிமிடங்களில் அவரது பெயரை மறந்துபோயிருந்தேன். இப்பொழுது விடை பெறும்போது தேவைப்படுமோ என்ற அவஸ்தையில் சீனுவாசனா, பத்மனாபனா என்று யோசித்துக்கொண்டிருந்தபோது அவர் இப்படிச்சொன்னது வசதியாகப்போய்விட்டது. "ரொம்ப சந்தோஷம். நான் வரேன்." என்று அந்த அறையைவிட்டு வெளியே வந்தேன்..

வாசலில் ஒரு ஆபிஸ்பாய் என்னைக் கண்டுகொண்டான். "சார்... நான் உங்க விசிறி சார்.. எப்படி சார் இருக்கீங்க.. காகிதத்துல உங்க புக் வெளிவருதா சார் ?" என்றபடி பின்னாடியே வந்தான். பாக்கெட்டில் சில்லறை இருக்கிறதா என்று துழாவிப் பார்த்தேன். என் செய்கையை புரிந்துகொண்டவன் ஆவலாக நின்றான். பத்து ரூபாய் காகிதம் ஒன்று அகப்பட்டது.. அவன் கையில் திணிந்தேன். "எதுக்கு சார் இதெல்லாம்... " என்று கூச்சமில்லாமல் வாங்கிக்கொண்டான். வாசலில் பார்க் செய்திருந்த என் பைக்கை வீட்டுக்கு விட்டேன்.

சாலை முழுவதும் எதிர்காலம் தெரிந்தது. அதன் செர்வீஸ் லேனில் மெதுவாக வண்டியை செலுத்தியபடி யோசித்துக்கொண்டே வந்தேன். எல்லா பெரிய எழுத்தாளர்களும் இப்படிப்பட்ட நிலைகளைக் கடந்துதான் வந்திருப்பார்களோ ? ஆலோசனை அவசியம். புதிதான - புதுவிதமான ஒரு குழப்பம் ஹெல்மெட்டுக்குள் என் தலையை அழுத்தியது. ஆனால், என் அளவில் எனக்கு நண்பர்கள் குறைவு. ஒன்று ரசிகர்களாக இருக்கிறார்கள்.. அல்லது அளவில்லா போதனைகள் கொடுக்கும் அறிவு ஜீவிகளாக இருக்கிறார்கள்.. இரண்டுமே இல்லாமல் தன் வேலை உண்டு, தன் குழந்தைகள் உண்டு என்று என் மனைவி இருக்கிறாள்..

"பக்கத்துவீட்டுக்கு கார்பெண்டர் வந்திருக்காருங்க..." என்று கதைவைத் திறந்துவிட்டு உள்ளே சென்றபடி சொன்னாள். வீட்டுக்குள் வந்தவுடன் நினைவுகள் வேறு ஆடைகளைப் போட்டுக்கொள்கின்றன. எவ்வளவு சீக்கிரம் அதைப்போட்டுக்கொள்கிறோமோ, அவ்வளவு சீக்கிரம் நிம்மதி கிட்டும். துரிதமாக யோசித்தேன்.. எதற்காக நம் வீட்டுக்கு கார்பெண்டர் வரவேண்டும் ? அலமாரிக்கு.. அந்த பழைய செய்தித்தாள்களும், சில பழைய போட்டோ ஃப்ரேம்களும், சென்ற வருடம் வாங்கிய "சிறந்த புதினம்" விருது வீற்றிருக்கும் ஹாலின் அலமாரிக்கு கதவுபோடவேண்டும் என்று போனவாரம் கட்டிலில் புரண்டபடியே சொன்னது ஞாபகம்வந்தது. இந்த வருடமும் விருது வாங்குவேன் என்பது அவளது நம்பிக்கை.

அவள் மோர் கொண்டுவந்து கொடுத்தாள். "நல்ல செய்வாராமா.. ?" என்று கேட்டேன். எனக்கும் அந்த அலமாரிக்கு கதவுபோடவேண்டும் என்ற எண்ணம் இருந்தது.. கூடவே கடைசியாக எழுதிய புஸ்தகத்தின் மூலம் நல்ல சன்மானம் வந்து இருந்தது. "அவங்க வீட்டுக்கு இவர்தான் செய்யறார்.. ஒரு தடவை போய் பார்த்துட்டு வந்தா தானே !!" என்றாள். பக்கத்துவீட்டு அம்மாளும் என் மனைவியும் நல்ல சினேகிதர்கள். அதாவது சினேகிதிகள். தமிழில் பெயர்ச்சொற்களில் அனாவசியமாக வார்த்தைகளில் பால் மற்றும் எண்ணிக்கைகளைக் குறிப்பிடுவது பற்றி கொஞ்சம் எழுதவேண்டும்.

"வரீங்களா ?"
"ம்ம் ?"
"பக்கத்து வீட்டுக்கு.. சார் கூட வீட்டில தான் இருக்கார்.. கார்பெண்டர் கிட்ட பேசலாம்.. அப்படியே.." அலுப்பு தட்டியது. கொஞ்சம் கூச்சமாகவும் இருந்தது. சென்ற வருடம் அந்த விருது வாங்கியதிலிருந்தே கொஞ்சம் கூச்சமாக இருந்தது. ரொம்ப அதிகம் புகழ் இல்லையென்றாலும் அந்த வட்டாரத்தில் முகத்தை பரிச்சயம் கொள்ளும் அளவுக்குப் புகழ் வந்திருந்தது. அதனால் தன்மானம், தன்னடக்கம், தலைக்கனம், தற்பெருமை போன்ற வார்த்தைகளின் இலக்கணங்களை அதீதமாக உணர்ந்து அடக்கிவாசிப்பதாக முடிவெடுத்தேன். வாசலில் மாட்டியிருந்த போர்டை எடுத்தாகிவிட்டது. புகழின் முகவரிக்கு தெருவின் முகவரி தேவையில்லை என்பதை உணர்ந்தேன். பல பொது நிகழ்ச்சிகளுக்குச் செல்வதை தவிர்த்தேன்.

கொஞ்ச நேர சண்டைக்குப் பிறகு நான் பக்கத்து வீட்டுக்குள் நுழைந்துகொண்டிருந்தேன்.. என்னை வெற்றிபெற்ற மனைவி கைதியாக என்னைச் சங்கிலியில் பிணைத்து இழுத்துக்கொண்டு சென்றாள்.

"வெரி வார்ம் வெல்கம் !!.. " என்று வரவேற்றார் பக்கத்துவீட்டுக்காரர். பக்கத்து வீடாக இருந்தாலும் செருப்பு போட்டுக்கொண்டு வந்த என் போலித்தனத்தை நினைத்து வெட்கமாக இருந்தது. செருப்பை வாசலில் கழட்டிவிட்டு உள்ளே சென்றேன். ஆனாலும் வெட்கம் கூடவே வந்தது.

"உக்காருங்க.. என்ன சாப்பிடறீங்க.." என்று எதற்காக வந்தீர்கள் என்ற தொணியில் கேட்டார். நான் பதில் சொல்வதற்குள் அவர் மனைவி பதில் சொன்னார். "முரளி நம்ம வீட்டில செஞ்சிருக்கிற இன்டீரியரையெல்லாம் வந்து பாருங்கன்னு கூப்டிருந்தேன்.. பார்க்க வந்திருக்காங்க.. காப்பி சாப்பிடறீங்களா ?" என்று கேட்டார்.

"ஒன்னும் வேண்டாம்.. தாங்க்ஸ் ! இப்பொதான் மோர் குடிச்சுட்டு வரேன்." என்று சொன்னேன். அவர் நம்பிவிட்டார் - நல்லவேளையாக.

"இதோ.. இந்த வால் யூனிட் முரளி பண்ணினதுதான். நம்பகமான பையன். அவ்வளவா காசு வாங்க மாட்டான். கிட்ட போய் பாருங்க.." என்று வற்புறுத்தினார்.

பார்த்தேன். தூரத்திலிருந்து பாப்பதற்கு பாலிஷாக இருந்தது. இதைக் கிட்டத்திலிருந்து பார்க்கவேண்டும் என்றால் எப்படி பரிசோதிக்க வேண்டும் என்று தெரியவில்லை. பாவனைக்குத் தட்டிப் பார்த்தேன்.

"நல்ல மரம் தான்.. ஜே.எஃப்.கே ல இதே குவாலிட்டி தர்டி ஃபைவ் சொல்லுவான்.. எனக்கு டொண்டி டூ ல முடிஞ்சுபோச்சு" என்றார்.

மேலே ஷெல்புகளுக்கு கண்ணாடிக் கதவுகள் இருந்தன.. அவற்றில் போட்டோக்கள் இருந்தன.

"அது என் பொண்ணு.. ஸ்வீடன்ல எம்.எஸ் பண்ணிட்டு இருக்கு.. "

ஒவ்வொரு அலமாரி ஷெல்புக்கும் அவர் விவரிப்பு கொடுப்பாரோ என்று பயந்து "ரொம்ப நல்லா இருக்கு.. நல்லா பண்ணியிருக்கார்.." என்று இருக்கைக்குத் திரும்பினேன்.

"மாடில மரம் அறுத்துட்டு இருக்கான். வரச்சொல்லட்டுமா ?" என்று கேட்டார்.

"ஒன்னும் அவசரம் இல்ல.. வரட்டும்.. வீட்டுக்கு வரச்சொல்லுங்க.. நான் பேசிக்கறேன்.."

"நல்லது.." என்று அமைதிக்கு வழிவிட்டார்.

"மொத தடவையா வந்திருக்கீங்க. கொஞ்சமா காப்பி சாப்பிடுங்களேன்.." என்று மறுபடியும் ஆரம்பித்தார்... என் மனைவி இடைப்பட்ட நேரத்தில் உள்ளே சென்று சினேகிதம் வளர்த்துக்கொண்டிருந்தாள்.

"நோ.. நோ.. இன்னொரு நாள் கட்டாயம் வரேன்.." என்று அவஸ்தையாக நெளிந்தேன்.

"ஹ்ம்ம். உங்க எழுத்தெல்லாம் எப்படிப் போயிட்டு இருக்கு ?" என்று கேட்டார். இந்தக் கேள்வி பல வார்த்தை வடிவங்களில், பலவித குரல்களில், பலப்பல நோக்கங்களில் என்னை நோக்கி எறியப்பட்டிருக்கின்றன. கேள்வி கேட்பவருக்கு பதிலின் மீது அக்கறை இல்லாமல் இருக்கும் பட்சத்தில் கேட்கப்படும் கேள்வி இது. இதற்கு மிகச்சிறந்த பதிலை நான் கண்டுபிடித்திருந்தேன்.

முதலில் புன்னகை செய்துவிட்டு "போயிட்டிருக்கு.." என்றேன்.

"நல்லது" என்றார். "அடுத்த கதை ரெடியாயிட்டு இருக்கோ !"

"இனிமேதான்.. யோசிக்கனும்" என்றேன்.

"எப்படி இருக்கு மார்க்கெட் ரியாக்ஷன்." என்று கேட்க, நான் புருவங்களைச் சுருக்கினேன். உண்மையிலேயே எனக்கு ஓப்பன் கொஸ்டின்களின்மீது வெறுப்பு வளர்ந்துகொண்டிருந்தது.

"சாரி.. நான் சேல்ஸ்ல இருக்கேன்.. அதனால, எல்லாத்தையும் கொஞ்சம் அந்த நோக்கத்திலேயே பார்க்கற புத்தி வந்திருச்சு.. புஸ்தகத்துக்கும் எனக்கும் ரொம்பதூரம்." என்றார். அவர் அலமாரியில் பலப்பல புத்தகங்கள் அடுக்கிவைக்கப்பட்டிருந்ததையும் அவரையும் ஒருமுறை பார்த்தேன். இரண்டரை மீட்டர்தான் இருக்கும்.

"ஏன் கேக்கறேன்னா... புஸ்தகங்களுக்கு அவ்வளவா மார்க்கெட் இல்லேன்னு அடிக்கடி பேசிப்போம். குறிப்பா தமிழ் புஸ்தகங்களுக்கு.. என்ன சொல்றீங்க"

"வாஸ்தவம்தான்."

"மார்க்கெட் இல்லேங்கறீங்களா ?"

"அப்படித்தான் தோணுது.. நான் இதுக்கெல்லாம் புதுசு,.. பெரிய எழுத்தாளனாக வரனும்ங்கறது கனவு... அதுக்கான எழுத்து என்கிட்ட இருக்கிறதா நம்பறேன். ஆனா, அந்தக் கனவுக்கும் என் எழுத்துக்கும் நடுவுல இந்த வியாபாரம் இருக்கு."

"உங்க முதல் கதை பப்ளிஷர் யாரு ?"

சட்டென்று புகையிலை வாசனை ஞாபகத்துக்கு வந்தது. அந்த ஞாபகம் மூக்கில் உணரப்பட்டதா.. அல்லது அந்த மணத்தை உணர்வதான மயக்கமா என்று தெரியவில்லை.. "காகிதம் பதிப்பகம் அப்படீன்னு..."

"ஓ.. நான் கேள்விப்பட்டிருக்கேன். உங்க அடுத்த கதையும் அவங்கதானா ?" என்று கேட்டார்.

அடுத்த கதை எதைப்பற்றி.. என்ன கதைக்களம் என்றெல்லாம் வந்த பல கேள்விகளிலிருந்து இவர் கேட்கும் கேள்விகள் மாறுபட்டு இருந்தன. சேல்ஸில் இருப்பதாதால் இருக்கும். சேல்ஸ் என்றால் ? என்ன சேல்ஸ் என்று கேட்கவேண்டும்.. என்னைப் பற்றியே கேள்விகள் உழல்வது சங்கோஜமாக இருந்தது.

"அதைப் பத்திதான் இன்னிக்கு பேசிட்டு வரேன்." என்றேன். கொஞ்ச நேரமாக விட்டுப்போயிருந்த மன அழுத்தம் மீண்டும் வந்து வயிற்றில் புகுந்து கொண்டது.

"ஓ.. வெரி குட்.." என்று இன்னும் பதில் எதிர்பார்த்துக் காத்திருந்தார். நான் அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் மௌனம் காத்தேன்.

"ஹோப் யூ ஆர் இன் தி குட் புக்ஸ் ஆப் யுவர் பப்ளிஷர்" என்று டபிள் மீனிங்கில் ஹாஸ்யமாகப் பேசியது கொஞ்சம் இதமாக இருந்தது. வாய்விட்டுச் சிரித்தேன். நான் சிரித்தது அவருக்கு உத்சாகம் அளித்தது போலும். மடை திறந்து பேச ஆரம்பித்தார்.

"இப்ப எல்லா மீடியாவுமே விக்கறவன் கையிலதான் சார் இருக்கு..பல சினிமாக்களின் வெற்றி டிஸ்ட்ரிப்யூஷன்லதான் இருக்கு.. என்னதான் க்ரியேட்டிவிட்டி இருந்தாலும் இல்லாட்டாலும் விக்கறவன் புத்திசாலியாயிருந்தா செஞ்சவன் ஜெயிச்சுடறான்"...

"நீங்க சொல்லறது உண்மையா இருக்கலாம்.." என்றேன், மனதிற்குள் யோசித்தபடியே. என் வெற்றிக்கு வேறு யாரையும் கர்த்தாவாக்க எனக்கு விருப்பமில்லாமல் இருந்தது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. இதுதான் இறுமாப்போ. இல்லை.. வெற்றியில் சதவிகிதம் பார்க்க முடியாது. அது தவறு.

"அஃப் கோர்ஸ்.. புஸ்தக வியாபாரம் எப்படின்னு தெரியலை.. ஜஸ்ட் க்யூரியஸ்.. அதில் ஜீவனம் நடத்தற அளவுக்கு பணம் வரக்கூடிய புஸ்தகம் எப்படி எழுதுவதுன்னு உங்களுக்குத் தெரியுமா ?"

புத்திசாலித்தனமான கேள்விதான். நானும் அதைப்பற்றி யோசித்திருக்கிறேன். இருந்தாலும் யோசித்துவைத்த பதிலை இவருடன் பகிர்ந்துகொள்ள விரும்பாமல், "எனக்கு எழுத்து ஜீவனம் கிடையாது. கனவு. நான் பகல்வேளைகளில் கனவு காண்பது இல்லை. அதற்குத் தான் அஷோக் லீலேண்ட் போறேன்"..என்றேன்.

"ரொம்ப ஸ்வாரஸ்யமா பேசறீங்க".. என்றார். வெடுக்கென்று பதிலளித்துவிட்டோமோ என்ற எண்ணம் வந்தது... கொஞ்சம் பதமாகப் பேசப் பழக வேண்டும்.

"இன்னிக்கு பப்ளிஷரும் இதே மாதிரிதான் கேள்வி கேட்டார்... நான் என்ன மாதிரி கதை எழுதனும்னு ரசிகர்கள் விரும்பறாங்கன்னு கண்டுபிடிச்சு என்கிட்டே சொன்னார்... அந்த மாதிரி கதையோட வாங்க.. அப்படீன்னார்.."

"ஓஹோ !" என்று புருவங்கள் உயர்த்தினார். "அண்டர்ஸ்டாண்டபிள் !" என்றார். அவரால் அந்த பப்ளிஷரின் அலைகளைப் படிக்கமுடிந்ததாகத் தெரிந்தது.

"ஆனா, எனக்கு அப்படித் தோணலை.. என் பேனாவுக்கும் எனக்கும் இடையில் எந்த ரசிகனின் ஆசையும், பப்ளிஷரின் மூக்கும் நுழைவது எனக்குப் பிடிக்கவில்லை"

"நியாயம்தான் சார். எல்லா கலைஞர்களுக்கும் தோணும் இது.. எனக்குத் தெரிஞ்ச ஒரு நண்பர்.. ரொம்ப நல்லா படம் வரைவார். முதல்ல அவர் படைப்புகளுக்காக அவரைப் பாராட்டினாங்க.. அப்புறம், அவங்க பாராட்டுக்காக இவர் படம் வரைஞ்சார். கடைசியில காசுக்காக முக்கியமான பத்திரிக்கைங்கள்ள படம் வரையரார். எடிட்டர் கூப்பிட்டு இந்தப் பெண்ணோட மார்புப் பகுதி நல்ல விசாலமா வரணும்னு கேக்கறார்.. தொப்புள் தெரியனும்கறார்.. சாரி, க்ராஸா பேசரதா நினைச்சுக்காதீங்க.. அப்படி நடக்குதுன்னு சொல்ல வர்ரேன்.."

"புரியுது" என்றேன். நான் அப்படி இல்லை என்று அவரிடம் இப்பொழுது சொல்லவேண்டும் என்ற உந்துதல் ஒருபக்கம் இருந்தாலும், ஒரு பக்கம் எங்கோ சறுக்கியதாகத் தோன்றியது.

என் மனைவியும் அவர் மனைவியும் சிரித்துக்கொண்டே வந்தனர். நான் வெகு நேரமாக காத்துக்கொண்டிருந்தது போல, "போலாமா" என்றேன்.

வாசல் வரை வழியனுப்பி "அடிக்கடி வாங்க." என்றார்.

"வரேன்".

---
வீட்டுக்குள் பல விதமான யோசனைகளை உள்வாங்கிக்கொண்டு வந்தேன். "ஜீவனம்-பணம்-கதை-தெரியுமா" என்ற வார்த்தைகள் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன.

"அவங்க வீடு மாதிரியே வால் யூனிட் பண்ணிடலாமாங்க ?" என்று கேட்டாள்.

"கொஞ்சம் யோசிச்சுப் பண்ணலாம், சிவகாமி." என்றேன், யோசனையோடு.

2 comments:

மனுநீதி said...

நல்ல கதை கீர்த்தி.

//புகழின் முகவரிக்கு தெருவின் முகவரி தேவையில்லை // அருமையான வரி

//அவர் படைப்புகளுக்காக அவரைப் பாராட்டினாங்க.. அப்புறம், அவங்க பாராட்டுக்காக இவர் படம் வரைஞ்சார் //

நிதர்சனத்தை பத்தி சொல்லிருக்க. எல்லா தொழில்லையும் இதே நிலைமை தான் :(

சுரேஷ் கண்ணன் said...

நல்லா எழுதியிருக்கீங்க. கதை சரியான இடத்தில் தொடங்கி சரியான இடத்தில் முடிந்திருக்கிறது. சமரசப்படுத்திக் கொண்டுதான் எழுத வேண்டுமா என்று ஒவ்வொரு படைப்பாளியும் யோசிக்க ஆரம்பித்துவிட்டால் தரமான படைப்புகள் மாத்திரமே வரும் வாய்ப்பு. ஆனால் அது பெரும்பாலும் கற்பனைதான்.

//பெயரை மறந்துபோயிருந்தேன். இப்பொழுது விடை பெறும்போது தேவைப்படுமோ என்ற அவஸ்தையில்//

//எப்படி பரிசோதிக்க வேண்டும் என்று தெரியவில்லை. பாவனைக்குத் தட்டிப் பார்த்தேன்.//

//சட்டென்று புகையிலை வாசனை ஞாபகத்துக்கு வந்தது. அந்த ஞாபகம் மூக்கில் உணரப்பட்டதா.. அல்லது அந்த மணத்தை உணர்வதான மயக்கமா என்று தெரியவில்லை//


இதெல்லாம் நான் ரொம்ப ரசிச்ச வரிகள். தொடர்ந்து எழுதுங்கள்.