Thursday, April 01, 2010

நீராவி

இன்று காலை ஏழு பதினொன்றுக்கு எனக்கு வானத்தில் பறக்க கற்றுக்கொடுத்த வாத்தியார் இறந்துபோனார். அன்று மாலை துக்கத்துடன் மொட்டை மாடியின் மதில் சுவரில் நின்று கொண்டிருந்தேன். வாத்தியாரின் குடும்பத்தினர் அழுததை மனக்கண்ணில் பார்த்துக்கொண்டிருந்தேன். சோகம் - எனக்குக் கற்றுத்தரப்படாத ஒரு சொல். உணர்ச்சிகளுக்கு அப்பார்ப்பட்ட நிலைகள் மட்டுமே பாடம். கற்பனைக்கும் நிச்சயத்துக்கும் நடுவே ஒரு பயணம். நீண்ட பயணம்.. வாத்தியார் இட்டுச் சென்ற ஒரு பயணம். அந்த கற்பனைகளின் எல்லைகள் முடிவது போல எழுந்தது. அந்தப் பயணத்தை வழி நடத்திய வாத்தியார் ஒரு வெள்ளை ஒளிவெள்ளத்தில் மறைவது தெரிந்தது.. அந்த ஒளி மறைந்து சூழ்ந்த இருட்டில் பயணம் முடிந்தது.

வாத்தியாரின் மனைவி மார்பில் அடித்துக்கொண்டு குரல் எழாமல் தழுதழுத்து அழுதது கண்ணில் தெரிந்தது. அவர் உயிருடன் இருந்திருந்தால், அதிலிருந்து ஒரு பாடம் சொல்லிக்கொடுத்திருப்பார் என்று தோன்றியது. Hypothesis.. உயிருடன் இருந்திருந்தால்.. எங்கள் பாடங்களின் சூட்சமமே அதில்தான் அடங்கியிருந்தது. "நீராவி பற்றி உங்கள் கருத்து என்ன ?" என்று வாத்தியாரின் குரல் முதல் பாடத்திலிருந்து இன்னும் உயிருடன் செவிப்பறையில் கேட்டது.

மூன்றரை ஆண்டுகளுக்கு முன் என் மேஜைக்கு காப்பி கொண்டுவந்து கொடுத்த ஆனந்தன் - அவன் தான் அவர் ஆனான். வெள்ளிக்கிழமை பாருக்கு சென்றபோது துவங்கிய உரையாடல் வரலாறு ஆனது. அன்றையிலிருந்து நான்காவது நாள் எனக்குப் பறக்கக் கற்றுக்கொடுத்தார் வாத்தியார். கரும்பலகையில் ஒரு வட்டத்தைப் போட்டார். பின்னர் எங்கள் கற்பனையில் அந்தக் கோட்டை அழிக்கச் சொன்னார். முதலில் சிரித்தோம். பின்பு கால்களை நேராக வைத்து, க்ளாஸை மேஜையில் வைத்து மனதை ஒரு நிலைப் படுத்தி புருவங்களை நெருக்கிப் பார்த்தோம்.. நிஜம் என்பது நிச்சயமான, அளவுள்ள, பரிணாமங்கள் கொண்ட கற்பனை. என்பதை உணர்ந்தோம். வெள்ளைக் கோடு மறைந்தது. அடுத்த பாடம் நாளைக்கு.

அமானுஷ்யம் எதுவும் இல்லாத சூட்சமங்கள். மனித மனம் தனக்குத்தானே விதைத்துள்ள கட்டுப்பாடுகளை கடந்தால், அளவு இல்லாத வெளி. அந்த வெளியில் கற்பனையின் தீற்றத்தின் திறன் மனிதனின் இப்பொழுதைய சக்தியைக் காட்டிலும் பல மடங்கு பெரியது. Belief and imagination are perpendiculars. Reality meets at ninety degrees. எனக்கும் வாத்தியாரின் அக்கா பையனுக்கும் தான் பாடம். தினமும்.

நான் வானத்தில் பறந்த நாளை என் வாழ் நாளில் மறக்க முடியாது. இறக்கைகள் என்பது அப்பட்டம். ஒரு எல்லைக் கோடு. அந்த எல்லையை எட்ட முடியாததால்தான் அதைத் தாண்டிய நிலைக்குச் செல்ல முடியாத சிறையில் அடைபட்டுக் கிடக்கிறோம். எல்லைக் கோட்டை கற்பனையில் அழித்தோம். அந்த எல்லை அடைய அடைய, அதைத் தாண்டிச் செல்லச் செல்ல - பறந்தோம். கைகள் விரிக்காமல், காலை அகட்டாமல்... பறப்பதற்கு அடையாளமாக நாம் கற்பனை செய்யும் எந்த விஷயத்தையும் செய்யாமல், பறந்தோம்.. காற்று முகத்தில் அடித்தது.. தலைமுடி பறந்தது.. சுதந்திரம்.. புவி ஈர்ப்பு அற்ற நிலை. எந்த விதமான தொடர்பும் இல்லாத நிலை.. freedom. பற்றற்ற நிலை.

நான் வசித்துவந்த அப்பார்ட்மென்டில் ஒரு முதியவர் பார்த்துவிட்டார். யாருக்கும் தெரியாமல் நாங்கள் செய்து வந்த படிப்பு பொதுக்கருத்துக்கு அப்பாற்பட்டது. முதலில் "நீங்களா ?" என்ற கேள்வி, பின்பு "சிறுவர்கள் பயப்படுவார்கள்.. இல்லையென்றால் பின்பற்ற ஆரம்பித்துவிடுவார்கள்.. அது ஆபத்தில் முடியலாம்" என்ற போதனைகள் ஆனது. அவர்கள் பேசியதெல்லாம் வார்த்தைகளாக மட்டுமே உணரப்பட்டது. அதன் அர்த்தங்கள் உயிரில்லாதவை என்ற உண்மை தெளிவாகத் தெரிந்தது. சுதந்திரத்துக்கு தடை என்பது non-existing. கற்பனையில் மட்டுமே சாத்தியம்.

குடும்பம், பந்தம், பாசம் எல்லாம் போலித்தனம் என்பது தெரிந்தது. உணர்வுகள் என்பது வெறும் interpretation. உண்மை நிலை அல்ல. வாத்தியாரின் போதனைகள் அத்தனையும் காதில் ரீங்காரம் இட்டுக்கொண்டிருந்தன.

அவர் மனைவி அழுதது மறுபடியும் தெரிந்தது. நானும் அவர் அக்கா பையனும் அவரைத் தேற்றினோம். "குடிகார நாய்களா... கொண்ணுட்டீங்களே.. !".. உணர்வுகளின் அடிமைகள் சொல்லும் வார்த்தைகள்.. வாத்தியார் இறந்துவிட்டார். நீர். ஆவி. மொட்டை மாடியில் மெல்லிதாக ஒரு காற்று வீசியது.. பாட்டிலை மூடிவிட்டு பறக்க ஆரம்பித்தேன்..

தொப்.

1 comment:

Keerthi said...

test.