Tuesday, March 13, 2012

மறு-மறு-மறுபடியும் !

சென்ற வருடம் சென்னை வந்ததிலிருந்து இந்த ப்ளாக் பக்கம் அனேகமாக வரவே இல்லை. அதற்கு முன்பு ஒன்றும் சோபனமாக இருக்கவில்லை என்றாலும், சென்னை வந்த பிற்பாடு அறவே எழுத விழையவில்லை. வந்தவுடன் திருமணம், அதன்பிறகு மலேசியா, தலை ஆடி, தலை காலாண்டு, தலை தீபாவளி, தலை கார்த்திகை,  தலை பொங்கல் என்று அனேகமாக இன்னும் ஒரு மாதத்தில் வாரண்டி பீரியட் முடியப்போகிறது. அடுத்த சீதனம் டெலிவரிக்கு அப்புறம் என்று சொல்லாமல் சொல்லிவிட்டார்கள். அது இல்லாமல், கார் வாங்கியது, ப்ரமோஷன் கிட்டியது, கமலஹாசனை தொடும்தூரத்தில் பார்த்தது என்று பல அச்சீவ்மென்ட் தருணங்கள். காருக்கு கடன் வாங்கியது, ப்ரொமொஷனால் நொந்துபோனது என்று வேறு கோணத்தில் ஏமாற்றங்கள் என்றாலும் "இடுக்கன் வருங்கால் இட்ஸ் ஓகே என்றிருக்க" என்ற பாலிசியை மனதில் தினம் மூன்றுவேளை உச்சரித்ததால் நிம்மதி குலையாமல் இருக்கிறேன்.

நீங்களும் நலமாக இருப்பதாக நம்புகிறேன்.

மேற்கண்ட காரணங்கள் அல்லாது ஃபேஸ்புக்கில் கொஞ்சம் அதிக நேரம் செலவழித்ததும் ஒரு காரணம். நான்கு நாட்களுக்கு ஒரு முறை இரண்டு வரிகள் புத்திசாலித்தனமாக எழுதுவது, அவ்வப்போது நான் எடுத்த போட்டோ போடுவது, பிரபல எழுத்தாளர்களின் கருத்துக்களை impulsiveஆக மறுப்பது, இரா.பார்த்திபனின் கிறுக்கல் கவிதைக்கு அதைவிட புத்திசாலித்தனமான கிறுக்கல் பதில் கவிதை எழுதுவது, என்று இன்னும் ஃபேஸ்புக் மோகம் தொடர்கிறது. இன்னும் அதில் ஸ்வாரஸ்யம் குறையவில்லை. டில்லியில் நில நடுக்கம், அங்கே உணரப்படும்போதே  ட்வீட்டப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் மலிங்கா அடிவாங்கும்போது அதைப்பற்றி அறுபது பேர் ஒரே நேரத்தில் சொல்லும் கருத்துக்கள் அகிரா குராசவா படம் பார்த்த உணர்வைத் தருகிறது. என்னைச் சுற்றி இருப்பவர்களின் கருத்துக்கள், விருப்பங்கள், வெறுப்புகள், உணர்வுகள் எல்லாம் இலவசமாக, இலகுவாக உட்கார்ந்த இடத்தில் மேய்வது, சௌகர்யமான பொழுதுபோக்காக இருக்கிறது.

அதே சமயத்தில், ஃபேஸ்புக்கில் அவதாரம் எடுப்பது கொஞ்சம் கொஞ்சமாக கட்டாயமயமாக்கப்படுகிறது. "என்னது நீங்க ஃபேஸ்புக்ல இல்லையா ?" என்று புவனத்தில் ப்ராணவாயு தீர்ந்தது போல பதறுகிறார்கள் சிலபேர்.  அமெரிக்கா பையன் சகதர்மினியோடு நையாகராவில் புனித நீராடி ப்ளாஸ்டிக் ரெயின்கோட்டோடு போட்டோக்கு போஸ் கொடுத்ததை பக்கத்துவீட்டு மாமா பார்த்து பையனின் பெற்றோருக்கு சொல்லுவார்.. "போனவாரமே பாத்துட்டேனே.. நீங்க இன்னும் ஃபேஸ்புக்குல பார்க்கலியா ?". நண்பர்களின் கல்யாணப்பத்திரிக்கை, டிராமா அரங்கேற்ற அழைப்பிதழ், கருத்தரங்கு அழைப்பிதழ் என்று எல்லாம் ஃபேஸ்புக்கில் ஓரத்தில் மஞ்சள் குங்குமம் தடவாமல் அனுப்பப்படுகிறது. கொஞ்சம் மிகைப்படுத்திச் சொல்லவேண்டுமென்றால், ஃபேஸ்புக்கில் சஞ்சாரம்செய்யாவிட்டால் கொஞ்சம் இக்னரன்ட்டாகி விடுகிறோம்/றேன்.

இதற்கு எதிர்ப்பாளர்களும் ஏராளம். என் பக்கத்து வீட்டு மாமா சொன்னார், "அதில எல்லாம் போகாதே ! பெங்களூர்ல சில பொண்ணுகள் பட்ட அவஸ்தையைப் பாத்தியா ? ஹிண்டுல வந்திருந்துதே !" என்று கரிசனமாகச் சொன்னார். "இட்ஸ் ஜஸ்ட் அ வேஸ்ட் ஆஃப் டைம்" என்று என் அலுவலகத்திலும் சொல்லுகிறார்கள். இன்னும் ஆர்குட் கதை பாடுபவர்கள், "ஃபேஸ்புக்கினில் காற்றுவரும் தூக்கம்வராது" என்று ராகம் இசைக்கிறார்கள்.

சிலருக்கு அது பிடிபடுவது இல்லை... முக்கியமாக நான் பயப்படுவது இதற்குத்தான். எனது நாட்-சோ-இளம்பிராயத்தில் ஒரு வயதான டாக்டருக்கு வேர்ட், எக்ஸல் பாடம் எல்லாம் சொல்லிக்கொடுத்துவந்தேன். அவர் படிப்பதற்கு பின்வரும் காரணம் சொல்லுவார். "என் அம்மாவுக்கு டி.வி. ரிமோட் பாத்தா அதிசயமா இருக்கு.. அதனால பயம்மாவும் இருக்கு.. சோ.. சேனல் மாத்த எங்ககிட்ட கேக்கறாங்க.. இது மாதிரி எனக்கு கம்ப்யூட்டர் ஆகிடக்கூடாது.. !" என்பார். ஃபேஸ்புக் ஒன்றும் அந்த அளவுக்கு முக்கியமில்லை என்றாலும், இதுவும் ஒரு டெக்னாலஜி.  கனவு மெய்ப்படவேண்டும். டெக்னாலஜி பிடிபடவேண்டும்.

இப்படியாக, ஃபேஸ்புக் புராணம் ஓடிக்கொண்டிருக்கையில் ஒரு மின்னஞ்சல் வந்து சினுங்கி நின்றது. "Your subscription for www.avyukta.net has to be renewed" என்றது. அப்போதுதான் ப்ரக்ஞையில் உதித்தது, இப்படி ஒரு அம்பலத்தில் யாம் ஒருகாலத்தில் ருத்ரநடம்புரிந்திருந்தது. தத்துப்பித்தென்று ஆரம்பித்து ஓரளவுக்கு டீசன்டாக எழுத ஆரம்பித்து, எப்படியாவது சுஜாதாவிடம் காண்பித்து "என்னை விட இந்தப்பையன் நன்றாக எழுதுகிறான்" என்று கற்றது பெற்றதும் பகுதியில் எழுதி ஓவர் நைட்டில் பிரபல எழுத்தாளராக மாறி ஷங்கர் படத்துக்கு வசனம் எழுதி, சில காண்ட்ரவர்ஸிகளில் மாட்டி, அடுத்த எலக்ஷனில் நின்று சி.எம் ஆகி ஸ்விட்ஸர்லேண்ட் போய்வரலாம் என்று பலப்பரிணாமங்களில் கனவுகளை விதைத்துவந்த தளம் "Avyukta". துரதிர்ஷ்டவசமாக சுஜாதா பரமபதமடைந்ததாலும், நான் அமெரிக்கா சென்றதாலும் மேற்படி கனவுகள் கனவுகளாகவே மறக்கப்பட்டன.

இன்று இந்தத்தளத்துக்காக க்ரெடிட் கார்டில் கூகிள் பத்து டாலர்களை பிதுக்கிஎடுத்துக்கொண்ட போது, "ஆய பயனென்கொல்" என்று யோசித்தேன். இரண்டு லைனுக்குமேல் இன்னும் எழுத முடியுமா என்று சந்தேகம்.

தீர்ந்தது.

4 comments:

Saleem said...

அற்புதம் ! ரொம்ப நல்லா இருக்கு...

B o o. said...

Sigh. How well u write. Please write more. I was pleasantly surprised to see an update from you in my reader. Congrats on the wedding or should I wish happy 1st anniversary instead?? :))

Unknown said...

Welcome back keerthi...

Chakra said...

Welcome back keerthi. Let me see if this post inspires me to revive my blog.