Thursday, May 10, 2012

டெக்னாலஜி ஹாஸ் இம்ப்ரூவ்ட் வெரி மச் யா !

ஆபிஸில் இரண்டு, வீட்டில் மூன்று, பின் எங்கு சென்றாலும் ஒன்று என்று தகவல் தொடர்பு சாதனங்கள் அளவுக்கு அதிகமாக என்னைச் சுற்றி சூழ்ந்திருக்கின்றன. எனது டெஸ்க்டாப், லேப்டாப், ஐபேட், ஸ்மார்ட்ஃபோன், ஸ்மார்ட் டிவி இப்படி அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் தொழில்நுட்பம் விரயமாய் இறைந்து கிடக்கிறது. ஒரு நாள் அனந்தசயனத்தில் ஐபேடை இயக்கிக்கொண்டிருக்கையில், முதன் முதலில் கம்ப்யூட்டரை நேரில் பார்த்த நாள் நினைவுக்கு வந்தது.


வில்லிவாக்கம் பாபா நகர், தூய யோவான் மேனிலைப்பள்ளி (St Johns என்பதன் தமிழாக்கம்).  உத்தேசமாக ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கையில்... அப்போதைய மரபில், ரிஸெஸ் பிரேக் என்று தனியாக கிடையாது. கஜேந்திர மோட்சக் கதையில் "ஆதிமூலமே !" என்று கஜேந்திரன் கதறியதைப்போல யாராவது அடிவயிற்றைப் பற்றிக்கொண்டு "மிஸ்ஸ்ஸ்ஸ் !" என்று எழுந்தால் போதும், எங்கள் கிளாஸ் டீச்சர், "ஆல் ஆஃப் யூ ஃபார்ம் எ லைன். ஹாண்ட்ஸ் அட் தி பேக்" என்று கார்கிலில் போருக்குத் தயாராகும் சைனியங்களைப்போல வரிசைப் படுத்தி, ஓரத்தில் ஒரு பினாயில் நாற்றமடிக்கும் பாத்ரூமுக்கு சிற்றுலா அனுப்பிவைப்பார். அப்படி ஒருமுறை நகர்வலம் வந்தபோது புதிதாக ஒரு அறை தயாராகிக்கொண்டிருந்தது தென்பட்டது.

நான் படித்த பதினாலு வருடங்களில் அந்தப்பள்ளி செங்கல் செங்கலாக வளர்ந்த வளர்ச்சி எனக்கு நன்கு பரிச்சயமானது. பள்ளித் தாளாளர் அறைக்கு அருகில் இன்னொரு குளிரூட்டப்பட்ட அறை. கண்ணாடி ஜன்னல், திரைச்சீலை, வாசலில் ஃப்ளோர் மேட் என அந்தக்காலத்து அந்தப்புரமாய் ஜொலித்தது. மேன்மக்கள் (seniors) மட்டும் உள்ளே சென்று வந்தனர். "அதுதான் கம்ப்யூட்டர் லேப்" என்று என் பக்கத்தில் இருந்த ஆருயிர் நண்பன் சொன்னான்.

யதேச்சையாக அந்த வருடத்திலிருந்து எனக்கு விபரம் தெரிய ஆரம்பித்துவிட்டபடியால், "எனக்குத்தான் தெரியுமே"  என்று பொய் சொன்னேன். வீட்டிற்குச் சென்று ஸ்கூலில் புது கம்ப்யூட்டர் லேப் வந்திருப்பதாகச் சொன்னவுடன், என் மாமா அமெரிக்காவிலிருந்து அனுப்பிய போட்டோ ஒன்றைக் காண்பித்தனர். அதில் மாமா ஒரு டிவிக்கு முன் உட்கார்ந்திருந்தார். கீழே டைப் ரைட்டர் போல ஒரு வஸ்து. இடம் பொருள் ஏவல் எல்லாம் கூட்டிப்பார்த்து, திஸ் ஹாஸ் காட்டு பீ தி கம்ப்யூட்டர் என்று உணர்ந்துகொண்டேன். சிவிக்ஸ் புக்குக்கு இடையில் அதை மறைத்துவைத்து அடுத்த நாள் பள்ளியில் காண்பித்து "இதான்டா கம்ப்யூட்டர். முன்னாடி இருக்கிறது என் மாமா டா" என்று பயாஸ்கோப் காண்பித்தேன்.

ஏசுனாதரின் கிருபையால், எனக்கு பயாலஜி பாடம் ஒத்துக்கொள்ளவில்லை. மேலும் குடும்பத்தில் ஒரு மாமா அமெரிக்கா சென்று கம்ப்யூட்டர் இயக்கி டாலர் செய்ததாலும், என் குடும்பம் முழுக்க அந்தப்பாதையை அப்யாசம் செய்ய ஆரம்பித்தபடியாலும், கம்ப்யூட்டர் வல்லுனர் ஆகியே தீரவேண்டும் என்று விதிக்கப்பட்டது. மொள்ளமாக பத்தாம் வகுப்புவரையில் கணினியின் வாசனையில்லாமல் வளர்ந்தேன். அரவிந்தசாமியின் ரோஜா க்ருப்டாலஜி, மைக்ரோசாஃப்ட் பில்கேட்ஸ் அண்ணாமலை ரஜினிகாந்த் மாதிரி பணக்காரர் ஆனது , ஷங்கர் படத்தின் முக்காபுலா டேன்ஸ் என மறைமுகமான பரிச்சயம் இருந்தது என்றாலும், முதன் முதலில் கம்ப்யூட்டர் பார்த்தது, என் மாமா வீட்டில் ஒரு லேப்டாப்பாக. ஐஷ்வர்யா ராய் வால்பேப்பர் மாற்றக் கற்றுக்கொண்டதுதான் என் முதல் கணினிப்பாடம். அப்புறம் ஸ்க்ரீன் ஸேவர், லாகான் மியூசிக், சி.டி. எஜெக்ட் என்று படிப்படியாக ஒரே நாளில் முன்னேறினேன். அடுத்த நாள் ஈமெயில் யாஹூவில் ஸ்தாபித்தேன். அப்புறம் மாமா கடல்கடந்து சென்றதால், ஒரு வருடம் அந்த ஈமெயில் பார்க்கவில்லை.ஈமெயில் என்றால் அடிக்கடி யாராச்சும் கடுதாசி அனுப்பியிருக்கிறார்களா என்று  பார்க்கவேண்டும் என்ற ப்ரஞை கூட இருக்கவில்லை.

பதினோறாம் வகுப்பு. கீதா மிஸ் எனக்கு கம்ப்யூட்டர் மேம். அந்த வருடம் புதிதாக லேப் விஸ்தரிக்கப்பட்டு முப்பது கம்ப்யூட்டர்கள் வாங்கப்பட்டன. பெரிய அறை. ஸ்ப்ளிட் ஏசி. எல்லோரும் ஷூவை கழற்றிவைத்துவிட்டு கமகமவென ஸாக்ஸ் மணம் கமழ உள்ளே சென்று இரண்டுபேருக்கு ஒரு கம்ப்யூட்டர் என்று இடம்பிடிக்கவேண்டும். பிடித்தேன். என் வாழ்வின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் இரவும் பகலும் இம்மையிலும் மறுமையிலும், கட்டைவிரல் ரேகைகள் தேயத்தேய இயக்கப்போகிறேன் என்று அறியாமல், முதல் முதலாக, ஏதோ ஒரு சுபயோக சுபகரண சுபதிதௌவில் கீதா மிஸ் சொல்லி "Enter" கீயை அழுத்தினேன். திரையில் "Welcome. Loading..." என்ற எழுத்து மின்னியது.

என் எதிர்காலப்பாதையின் முதல் அடியாக "Hello world !" என்று ப்ரோக்ராம் எழுத விசைப்பலகையில் ஆட்காட்டி விரலில் தேடித்தேடி அடித்துக்கொண்டிருந்த அந்த அழகான இறந்தகாலம் மெள்ளக்கனவாக மறைந்து, அதே ஆட்காட்டி விரலில் ஐபேடின்மீது ஸ்வைப் செய்து, அதிலிலிருந்து என் டி.வி.க்கு சிமிஞை செய்து டிவியை அணைத்து, உறங்கச் செல்லுமுன் வழியில் தென்பட்ட ராமர் படத்தைப் பார்த்தேன்.

அவருக்கும் கடந்த பதினைந்து வருடங்களில் நடந்தது ஆச்சரியமாய்த்தான் இருக்கும் என நினைத்தேன்.

No comments: