Monday, May 14, 2012

குலதெய்வம்

என் குலதெய்வக் கோயிலில் நடக்கும் ஸம்வத்ஸராபிஷேகத்தில் கலந்துகொள்ள வருடா வருடம் மே மாசம் மாத்தூர் செல்கிறேன். என் குல தெய்வம் மாயவரம் செம்பனார்கோயில் ஆக்கூர் அருகில் உள்ள மாத்தூர் எனும் கிராமத்தில் இருக்கும் காவல் தெய்வமான அய்யனார், ஸ்ரீ பூர்ணா புஷ்கலா சமேத சாஸ்தா பணீச்சரயப்பர். ஐயப்பனின் சொரூபம். இந்தக்கோயில் கடந்த பதினெட்டு வருடங்களில் அடைந்திருக்கும் வளர்ச்சியை நினைத்தால் பெருமையாக இருக்கிறது.

நிற்க.

இந்த "குலதெய்வம்" கான்செப்ட் என்ன ?

என் அப்பா, அவர் அப்பா, அவர் அப்பா என்று ஒரு இன்ஃபைனைட் லூப் போட்டு அது போய் முடியும் இடத்தில் உள்ள அப்பா, எந்த தெய்வத்தை வழிபட்டு வந்தாரோ, அந்த தெய்வம் என் குலதெய்வம் ஆகிறார். சில வழக்கங்களில், நமது முன்னோர் ஒருவரையே தெய்வமாக வழிபட ஆரம்பித்து வழிவழியாக வணங்கி "Demi God" என்று சொல்வார்களே, அந்த மாதிரி மனிதனாக இருந்து கடவுளாக மற்றவர்கள் வழிபட ஆரம்பித்து, காலத்தால் தெய்வமாகவே மருவிவிடுகிறார்கள்... அவ்வழிகளில் அவரே குலதெய்வமாகிறார். பல ஊர்களில் காவல்தெய்வங்கள் குலதெய்வமாக இருப்பதின் சரித்திரம் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும்.

முக்கியமாக, நமது குலதெய்வத்தை நமது முன்னோர்கள் வழிபட்டு இருக்கின்றனர். நமது தாத்தாவை அந்த தெய்வம் பார்த்திருக்கிறது. அவரது தாத்தா, பாட்டனார், முப்பாட்டனார் என்று ஆதிசந்ததி முன்னோர்கள், அதாவது நமது இரத்தசம்பந்தங்களை பார்த்த ஒரே தெய்வமாக இருப்பது அனேகமாக நமது குலதெய்வம் மட்டும்தான். திரைகடலோடித் திரவியம்தேட நமது முன்னோர் திக்கெட்டும் பறந்திருந்தாலும், அவர்கள் ஆரம்பித்த இடத்தில் நங்கூரமாக நின்றுகொண்டிருக்கும் தெய்வம் - The குலதெய்வம்.

இப்பொழுது பக்தி மிகுமிகுமிகுமிகுதியினாலும், கால்டேக்ஸி வாடகை கட்டுப்படியாவதாலும், சனி ஞாயிறுகளில் மக்கள் வீட்டு வாசலிலிருந்தே கும்பிட்ட கைகளுடன் கிளம்பி சென்னையிலும் சென்னை சுற்றுப்புறத்திலுள்ள கோயில்கள் அனைத்துக்கும் பறந்தோடிச்சென்று தரிசனம் செய்து "புண்ணியம் சம்பாதித்து" வருகின்றனர். ரயிலேறி தக்ஷிண மார்கத்தில் செல்பவர்கள், ஆர்கியாலஜி டிப்பார்ட்மென்ட் கண்டுபிடிக்காத கோயில்களைக்கூட விடாது தேடிக் கண்டுபிடித்து அர்ச்சனை மணியார்டர் ஃபார்ம் வாங்கி வருகிறார்கள்.

அந்தகோயிலில் அவ்வ்ளோ விசேஷம், பிரம்மா, விஷ்ணு, சிவன் மூணுபேரும் ப்ரத்யக்க்ஷமா காட்சி கொடுக்கறா... இன்னொரு கோயில், சிவஸ்தலம்.. அங்கே மட்டும் சூரிய ஒளி லிங்கத்தை வழிபடறது பாருங்கோ.. அங்கேருந்து ரெண்டு கிலோமீட்டர்ல இன்னொரு கோயில்.. அப்படியொரு கோயில் இருக்கறதே பலபேருக்குத் தெரியாது.. அங்கே போய் தங்கத்தால செஞ்ச கண்மலர் வாங்கி உண்டியல்லே போட்டுட்டு பின்னாலேயே நடந்துவந்தா __________ நடக்கும்.. இப்படி சந்தானலாபத்துக்கு ஒன்னு, சீக்கிரமே விவாஹ ப்ராப்தத்துக்கு ஒன்னு, சகல சம்பத்துக்கு ஒன்னு, சத்ரு நாசத்துக்கு ஒன்னு, ப்ளஸ் டூ பரீட்சைக்கு ஒன்னு என்று ஆளாளுக்கு ஸ்தலபுராணமும், பாபவிமோசன ஐடியாக்களும் ப்ரவாகமாய் புரளவிடுவார்கள். தெய்வ சமாச்சாரம் என்பதால், எதையும் ஹாஸ்யமாக எடுத்துக்கொள்ள முடியாது. இருக்கும் கஷ்டத்திற்கு எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்று டீசலை நிரப்பி அந்தந்தக்கோயிலுக்கு ஒரு விசிட் அடித்தே ஆகவேண்டும் என்று தமிழ் நாட்டு நடுத்தற வர்கம் வார இறுதிகளிலும், கோடை விடுமுறையிலும் முனைந்துள்ளது. While that might be good, நமது குலதய்வத்தையும் அடிக்கடி சென்று பார்த்து வணங்குவது நமது கடமை.என் குடும்பத்தில் வருடத்துக்கு இரண்டு முறை செல்வோம். அங்கிருந்து ஒரிரு நாளில் பக்கத்தில் இருக்கும் சில ஷேத்திரங்களுக்கும் ஒரு பயணம் செய்வோம்.

என் குலதெய்வக் கோயில் ஒரு பதினெட்டு வருடங்களுக்கு முன் முள்காட்டில் பதுங்கியிருந்தது. போய் வரப்பாதை சரியாக இல்லை. லொள்ளு சபா சந்தானம் ஒரு செங்கலில் ஒரு சின்ன போட்டோ ஒட்டி "இதான் உங்க குலதெய்வமா ?" என்று கிண்டலடிப்பாரே.. கிட்டதட்ட அந்த நிலமையில்தான் என் குலதெய்வமும் இருந்தார். அப்போது ஒரு சபா அமைத்து, அந்த தெய்வத்தைக் குலதெய்வமாகக் கொண்டவர்களின் பட்டியல் தயாரித்து, தொடர்பு கொண்டு ஒரு மீட்டிங் போட்டு, பணம் திரட்டி கொஞ்சம் கொஞ்சமாய் முன்னேற்றிக்கொண்டிருந்தனர். அதில் என் அப்பாவும் கலந்துகொண்டு அவர் சக்திக்கேற்ப பங்கேற்றார். அன்றிலிருந்து இன்றுவரை அந்த இடத்தை சீரமைத்து கிராமத்திற்கு ரோடு போட்டு, பாதையமைத்து, கோயில் கட்டி, கோபுரம் மண்டபம் வைத்து, நந்தவனம் செய்து, குருக்களுக்கு சம்பளம் கொடுத்து, நித்திய அர்சனை அபிஷேகம் ஏற்பாடு செய்து காலாகாலத்திற்கு கும்பாபிஷேகம் செய்து, வருடா வருடம் சம்வத்ஸராபிஷேகம் செய்து குலதெய்வத்தின் அருளோடு குலதெய்வத்தின் கோயிலை பராமரித்து வருகிறோம்.

அந்த சபாவை நிர்மாணித்து, வருடா வருடம் வெகு விமரிசையாக விழாக்கள் நிகழ்த்திவரும் அந்த சபா நிர்வாகிக்களுக்கு நானும் எனது குடும்பமும் என்கள் சிரந்தாழ்ந்த நன்றியினை உரித்தாக்குகிறோம்.

What about you ? உங்கள் குலதெய்வம் என்ன ? அவர் நலமா ?

No comments: