Friday, June 23, 2017

நடை பழகு

"வா. வாக்கிங் போலாம்" என்று அனந்துவை அழைத்தேன்.

"ஓகே" என்று சொல்லி கிடு கிடு என்று பிஞ்ச செருப்பு ஒன்றை மாட்டிக்கொண்டான். எப்பொழுதுமே அதையே ச்சூஸ் செய்வதன் காரணம் அறியேன். "அதுவேண்டாம். ப்ளூ போட்டுக்கோ" என்று அவன் மகிழ்ச்சியையும் என் மானத்தையும் தராசில் நிறுத்தி, மானமே மானப்பெரிது என்று தீர்ப்பு வழங்கி கட்டளையாய் அவனிடம் திணித்தேன்.

ஹ்ம்ம்..  சாதா மேட்டருக்கெல்லாம் இப்படி சீமான் கணக்காய் பொங்கத் தேவையில்லையே.. ! ஆனால் இப்படி Responsible Parentஆய் யோசிப்பதுதான் டிரெண்ட். குழந்தைகளின் தனித்துவத்தைப் பேணுவது என்பது கேனத்தனமான ஒரு விஷயம், என்பது என் தனித்துவமான கருத்து.

எனிவே.. ப்ளூ க்ராக்ஸ் செருப்பு மாட்டிக்கொண்டு, படிகளில் துள்ளிக் குதித்து எனக்கு முன்பாக சென்று கொண்டிருந்தான்.

வீட்டிலிருந்தாலும், மழ மழ என்று தரைபுரள எட்டு முழ வேட்டியே கட்டியிருந்த நான், வேளச்சேரி குடிபெயர்ந்ததும், இரண்டு நாடா வைத்த அரை டிராயர் வாங்கி வைத்திருந்தேன். அதில் ஒன்றில் ஜம்ப் அடித்து நானும் அனந்துவுடன் கிளம்பினேன்.

ரெண்டுங்கெட்டான் காலை வேளை. மணி எட்டரை ஆகியிருந்தது. வீட்டில் இன்னும் இட்லி, குக்கரில் liquid state to solid state ஆகிக்கொண்டிருந்தது. கிழக்கு நோக்கி நடந்தோம். சுளீரெனச் சூரியன் அனந்துவைப் பார்த்துக் கண் அடித்தான்.

"அப்பா.. ஒம்ப ஹாட்டா இக்கு !" என்றான் அனந்து. இன்னும் "ர" வரவில்லை. நா பிரளவைக்க நானும் ப்ரயத்தனப்படுகிறேன்.

"இட்ஸ் ஓகே ! கொஞ்ச தூரம்தான், அப்புறம் நிழல் வந்துடும்" என்று அவன் கைபிடித்து இழுத்துக்கொண்டே நடந்தேன்.

ஏழுமாதமாக அயராது வேலையில் மூழ்கி இகபர துக்கங்களனைத்தும் அனுபவித்து, திடீரெனப் பனியாக விலகிய பளுவினால், ஒருவழியாக இலஃகுவாகியிருந்தொரு சனிக்கிழமை அது. குழந்தையோடு இன்றைக்கு ஒரு மெமரி செய்யவேண்டும் என்ற முனைப்பில், இந்த நாள் முழுதையும் கழிக்க எண்ணம்கொண்டிருந்தேன்.

"லுக்.. ப்ளாக் டாக்" என்று நின்றான். அனந்துவுக்கு அத்தனை அனிமல்ஸும் இஷ்டம். கண்களாலேயே வாஞ்சையாகத் தடவிக்கொடுப்பான். கிட்ட நெருங்கினால் பயம். நானும் நின்றேன். எங்கள் இருவரையும் அந்த நாய் முனைப்பே இல்லாமல் படுத்துக்கொண்டே பார்த்தது. காலைச் சோம்பல். கதகதப்பாக மண்ணில் தனக்கென ஒரு நிழலான ஒரு இடத்தில் மெத்தை அமைத்து அன்றைய தேவையை பூர்த்தி செய்துவிட்டது. நிம்மதியை எங்கு கண்டாலும் மனதில் பொறாமை இழையோடுகின்றது. உடனே, சுய பச்சாதாபம் கொஞ்சமும், டிஃபென்ஸிவ் திங்கிங்கும் வந்துவிடும். அடுத்த வேளை சோத்துக்கு கஷ்டப்படும் தெரு நாய் அது. எனக்கு சுடச்சுட இட்லி வீட்டில் காத்துக்கொண்டிருக்கிறது.. ப்சே.. என்ன லூஸுத்தனமாக யோசிக்கிறோம்.

அனந்து குந்திக்கொண்டு உட்கார்ந்து நாயை ரசித்துக்கொண்டிருந்தான். தெருவில் யாரையும் காணோம். காற்று, வாசனை, நாத்தம், வண்டிச்சத்தம், குக்கர் விசில் என எந்தச் சலனமும் இல்லாத காலைப்பொழுதாக நகர்ந்துகொண்டிருந்தது.

"இப்பொ எப்படிப் போகனும் ?" என்று அனந்துவிடம் கேட்டேன். பாட்டியோடு தினமும் நடந்து இந்த நகரின் டோப்பாலஜி தெரிந்திருப்பான்  என்பது என் கெஸ். ஊர்ஜிதப் படுத்தினான். "இப்டி போய்.. பாக்கி பால்" என்றான். அந்த தக்குணூண்டு விரல் காட்டிய திசையில் ஒரு பாஸ்கெட் பால் கோர்ட் இருந்தது.

அனந்துவுக்கு பேச்சு மெதுவாகத்தான் வருகிறது. கொஞ்சம் வருத்தம்தான். ஆனால், மூணுவயதில் திருக்குறள் ஒப்பிக்கவைக்கும் ஆம்பிஷன் எனக்கு இல்லை என்பதால், not that disappointed. வார்த்தைகள் மழலையாய் விழுகின்றன. வாக்கியங்கள் தான் வரவில்லை. அதெல்லாம் வந்தப்பிறகு மோடி மாதிரி தளை தட்டாமல் பேசுவான் என்பது என் பேரவா. அதிகமாக ஆங்கிலத்தில் பேசுகிறான் அனந்து. தமிழை வண்ணாரப்பேட்டை ஸ்லாங்கில் பொளக்கிறான். ஒரு பக்கம் "நான் சேர்ல உக்காசினேன்" என்கிறான். மறுபக்கம் "ஐ ரெஸ்க்யூட் தி எலிஃபண்ட்" என்று அதிர வைக்கிறான். ஏதோ குழம்பி கலந்துகட்டி கம்யூனிகேட் செய்து விடுகிறான். வளரட்டும் பார்த்துக்கொள்ளலாம்.

பாஸ்கெட் பால் கோர்ட் தாண்டி இன்னும் நடந்துகொண்டிருக்கிறொம். அனந்துவுக்கு கால் வலிக்குமோ.. தூக்கு என்று சொல்லவில்லை. ஆசையாக உரையாடிக்கொண்டே வருகிறான். எது பார்த்தாலும், "லுக் அப்பா !" என்று எனக்கும் காண்பிக்கிறான். அவன் பார்வையில் உலகம் அதிசயம் நிறைந்ததாகவே இருக்கிறது. வேளச்சேரியின் வி.ஜி.பி நகரில் நித்ய-கன்ஸ்ட்ரக்ஷன் நடந்துகொண்டே இருக்கும். மலையாகக் குவிந்திருந்த மணல் ஜல்லியெல்லாம் வியந்தபடியே நகர்ந்தோம். நானும் அவனுடன் ரசித்தபடியே.

அனந்து தினமும் விளையாடும் ப்ளே க்ரவுண்ட் வந்தது. குழந்தைகள் யாருமே இல்லாத ப்ளேக்ரவுண்ட் மயானமய்த் தெரிந்தது. கையை விருட்டென்று இழுத்துக்கொண்டு, ஓடிப்போய் ஸ்விங்கின் அருகில் நின்றான். நானும் நுழைந்தேன். அப்புறம் ஸிஸா அருகில் ஓடி "ஸீஸா !" என்றான். ஒவ்வொரு விளையாட்டாக எனக்கு அறிமுகம் செய்தான். ஸ்லைடின் மேலேறி "லுக் அப்பா ! ஸோ டால் !!" என்றான்.  "அது முஞ்சுச்சு.. அது முஞ்சுச்சு.. அது முஞ்சுச்சு.. அது முஞ்சுச்சு.. "என்று வரிசையாக எல்லா கரணங்களிலும் விளையாடி முடித்ததாக அறிவித்தான். "லெட்ஸ் கோ ஹோம் !" என்றேன். "நோ !! நீ அங்க உக்காசு !" என்று பார்க் பெஞ்சைக் காண்பித்து அமர்வித்தான். மீண்டும் ஒரு ரவுண்டு எல்லாவற்றிலும் விளையாடினான். ஸ்விங்குக்கும் சறுக்குமரத்துக்கும் போட்டியே இல்லாமல் சுரத்து கம்மியாக இருந்ததால், அவனும் கிளம்பிவிட்டான்.

வெயிலின் கடுமை அதிகரிக்க ஆரம்பித்திருந்தது. இருவர் போட்டிருந்த டி-ஷர்ட்டும் வியர்வைமேவ உடம்பை ஒட்டத் தொடங்கியது. என் ஒற்றை விரலில் அவன் கைகளால் என்னைப் பற்றி பிஞ்சுக்காலடி பூமியில் தாளம்போட்டு நடையைத் தொடர்ந்துகொண்டிருந்தான். இடதுபக்கம் திரும்பினால் வீடு வந்துவிடும்.

லட்சியம், வீடு, கார், பணம் என்று தேடிக்கொண்டிருந்த வாழ்க்கை அப்படியே அனந்துவுக்காகவே மாறியது எப்போது என்பதை அறியாமல் அவன் காலடித்தாளத்துக்கு ஜதியாக நானும் நடந்துகொண்டிருக்கிறேன்.

My life is changing, One step at a time.

6 comments:

Bhuvana Anilkumar said...

Nice writing Keerthi, keep writing. A parental book can be in the far sight of this ��

mohan said...

Happy to see you again

Sundar said...

பசங்களோட இயைந்து வாழ்வதுதான் வாழ்க்கை

tushar soni said...


Courier in Sydney
Express Courier Sydney
Courier in Brisbane
Express Courier Brisbane
Courier in Melbourne
Express Courier Melbourne
Express Courier Adelaide
Courier in Adelaide

kavi said...

I would highly appreciate if you guide me through this.
Thanks for the article. Really nice one…
For Tamil News...
https://www.maalaimalar.com/
https://www.dailythanthi.com/
https://www.dtnext.in/

Elite Express said...

The Team Koshish is worthy of praise because they have worked in an extremely hostile situation and brought out the graphic details of physical injustices happening on the marginalized girls who actually were destitute. I shared your bloged in Vehicle towing company. It is best reviews. Thanks for sharing.